வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர்.

தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத இளம் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?


ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.
சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். ''என் டாடி சூப்பர்'' என்று சொல்லிக் கொண்டிருந்தவள், ''டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது'' என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.
என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.
''டாடி பிளீஸ்.... டாடி... வாங்கிக் கொடுங்க டாடி'' என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் ''டாட்.... எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா?'' என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். ''நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்'' எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர ''அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது'' என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.
இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், ''என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்..'' என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்! அதை விட்டு விட்டு, ''என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா....'' என புலம்பித் தள்ளாதீர்கள்.
இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.
அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.
நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில். டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.
டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். ''எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்'' எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை!
மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் – விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள். நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள். அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ''அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது'' எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். ''அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை'' என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.
இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள்? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம். டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.
சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.
ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது ''அப்பா தான் உலகம்'' எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.
சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். ''ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்'' எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். ''என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்'' எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.
இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
கடைசியாக ஒன்று. ''என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்'' என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்! வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார் என்பது வரலாறு. அவர் தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் எதிர்காலத்தில் அவரை முதல் பெண் பிரதமராக மிளிர்வதற்கு துணை நின்றது என்றுகூட சொல்லலாம். சிறையில் இருந்தபோதுகூட தன் மகளான இந்திராவுக்கு கடிதம் எழுத நேரு தவறியதில்லை.
thanks to:tamilislamicaudio.com
[ ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?''
முஸ்லிம் கேட்டார்; 'உங்கள் நாட்டு எலிஸபெத் ரானியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?''
அவசர அவசரமாக ம்றுத்தார் அந்த ஆங்கிலேயர்; ''அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே....!''
முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ''எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.' எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குளுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.'']

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது கிறந்ததாகும்.'' (நூல்:- தபரானி)

மேற்கூறப்பட்ட நபி மொழியை உற்றுநோக்கும்போது முஸ்லிம் சமூகத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர் மார்க்கக் கட்டளையை புறக்கணித்து விட்டு மேல்நாட்டு கலாசாரங்களை பின்பற்றுகின்றனர்.
சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன்மகள், சகோரனின் மனைவி, சாச்சி, மாமி, போன்றோருடன் கைக்குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நாம் தவிர்ந்துகொள்வது நன்று. இது கையின் விபசாரங்களில் ஒன்றாகும்.
பின்வரும் ஹதிஸ்களை சற்று கவனித்தல் நன்று.
''இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. இரு கைகளும் விபசாரம் செய்கின்றன. இரு கால்களும் விபசாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபசாரம் செய்கிறது.'' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்: ''நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாபஹா செய்ய கைகுலுக்க மாட்டேன்.'' (அறிவிப்பாளர்: உமைமா பிர்த் ருகைகா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: இப்னுமாஜா)
மேலும்: ''நிச்சயமாக நான் பெண்களின் கைகளைத் தொடமாட்டேன்.'' (நூல்: தபரானி)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட பொன்மொழிகள் ''நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிடுவேன் என மிரட்டும் கணவன்மார்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.
ஒரு ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அந்நிய ஆணுடனோ முஸபாஹாச் செய்வது ஹராமாகும். அது கை உறை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாபஹாச் செய்தாலும் சரியே!
thanks to:tamilislamicaudio.com

1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
 
1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
 
1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
 
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
 
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
 
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
 
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
Post image for சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனாலும்……
மனிதன் சபல புத்தியுடையவனாகவும், பலகீனமாகவும் படைக்கப்பட்டுள்ளான். அதே சமயம் அவனது சுய புத்தியில் அபார நம்பிக்கையுடையவனாகவும் இருக்கின்றான். தன் புத்தியில் நல்லவையாகப்படுபவை அனைத்தையும் உறுதியாக நம்பி செயல்பட ஆரம்பித்து விடுகிறான். அவனின் இந்தச் செயல்பாடுகளின் பலனை இந்த உலகில் பார்ப்ப முடிவதில்லையே! நாளை மறுமையில் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றான். 100 வயது கிழவனாக இருந்தாலும் தனது அனுபவத்தின் மூலம் இவ்வுலகில் அச்செயல்பாடுகளின் உண்மை நிலைகளை அறிந்துக் கொள்ள முடியாதே என்பதை எல்லாம் அவன் சிந்திப்பதில்லை. அதனை சிந்தித்துணரும் ஆற்றல் அவனுக்கில்லை. அதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் .
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை விரும்பலாம். ஆனால் அது உனக்கு தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (2:216)

எனவே மார்க்க விஷயத்தில் அவனது சுய சிந்தனையைத் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே செயல்படுத்தினால் மட்டுமே அவனுக்கு மறுமையில் வெற்றியுண்டு.
ஆதம்(அலை) அவர்கள் மனித வர்க்கத்தினரிலே ஓரளவு மறு உலக அனுபவம் பெற்றவர்கள், சுவர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் ஷைத்தானின் சேட்டைகளை நேரடியாகக் கண்டு அவற்றின் விளைவுகளையும் அனுபவித்து பெரும் துன்பப்பட்டு சீரழிந்து பின் சீர் பெற்றவர்கள். அப்படிப்பட்ட ஆதம்(அலை) அவர்களைக் கூட இவ்வுலகில் வந்து தன் சுயபுத்தியைக் கொண்டு நல்லது கெட்டதைத் தீர்மானித்து வாழும்படி அல்லாஹ் அனுமதிக்கவில்லை; தனது வழிகாட்டலின்படி மட்டுமே இவ்வுலகில் வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். அவர்களுக்குப் பயமோ துக்கமோ இல்லை. அதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டலை விட தங்களின் சொந்த புத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வுலகில் வாழ்பவர்கள் தோல்வியடைந்து நரகைச் சேர்வார்கள். அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள் என அல்லாஹ் தெளிவாகவே அறிவித்து விட்டான். அவ்வசனங்கள் வருமாறு:
(பின்பு) நாம் சொன்னோம்: “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” (2:38)
அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பர். (2:39)
அல்லாஹ்வின் இந்தத் தெளிவான உத்திரவுகளை தலைமேற்கொண்டு ஆதத்தின் சந்ததிகள் செயல்பட்டிருந்தால் அது எவ்வளவோ நல்லதாக அமைந்திருக்கும். இவ்வுலகில் பல மதங்கள் தோன்றியிருக்கா. மனிதரில் பிரிவுகள் ஏற்ப்பட்டிருக்கா ஆனால் அதற்கு மாறாக மார்க்க விஷயத்தில் தனது சொந்த புத்தியைச் செலுத்தி சீரழிந்து வருகிறான் மனிதன். அதன் விளைவு மனிதனை தெய்வமாக்குவதும். தெய்வத்தை மனிதனாக்குவதும் சர்வசாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது மனித வாழ்க்கையில், இக்கைங்கர்யத்தை வெகு சிரத்தையுடன் கடைப்பிடிப்பதோடு மக்களுக்கு அயராது போதித்து வருகிறவர்கள் பூசாரிகள், புரோகிதர்கள், பாதிரிகள், சந்நியாசிகள், மவ்லவிகள் ஆகும். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையில் இடைத்தரகர்களாக இருந்து வயிறு வளர்ப்பதுடன் மக்களை அல்லாஹ்வின் நேரியப் பாதையிலிருந்து வழி கெடுத்து அத்வைதம் என்று சொல்லப்படும் இறைவனையும் மனிதனையும் அதாவது படைத்தவனையும், படைக்கப்பட்டவனையும் ஒன்றாக்கும இணை வைக்கும் மாபாதகச் செயலை செய்ய வைத்து மனித வர்க்கத்தையே நரகில் கொண்டு சேர்த்து நரகை நிரப்பகின்றனர். இவர்கள் அனைவரும் இது விஷயத்தில் ஷைத்தானின் ஏஜண்டுகளாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
மக்களில் பெரும்பான்மையினர் செம்மறியாட்டுக் கூட்டம் போல் இந்தக் கயவர்களின் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு சென்று நரகப் படுகுழியில் வீழ்ந்து தங்களை அழித்துக் கொள்கின்றனர். இதனை அல்லாஹ் இவ்வாறு கூறி நம்மை எச்சரிக்கின்றான்.
“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத் ) தடுக்கிறார்கள். (9:34)
இந்த வசனத்தில் பாதிரிகளைப் பற்றியும் சந்நியாசிகளைப் பற்றியும் மட்டும் கூறி இருந்தாலும் இடைத்தரகர்கள் அனைவரது நிலையும் அப்படித்தான் என்பது சொல்லாமலே அனைவருக்கும் விளங்கும். இந்த அடிப்படையில் அதிகமான மக்கள் வழிகேட்டில் தான் இருப்பார்கள். இதற்கு குர்ஆன் கூறும் சான்று இதோ
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிக்கெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் பொய்யான கற்பனையிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். (6:116)
மக்களில் பெரும்பாலோர் வழிகேட்டில் இருக்கும் நிலையில் அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் எப்படிப்பட்ட தவறான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதை இனி ஆராய்வோம்.
அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் அசல் நோக்கம் மறுமையாக அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதாக இருந்தால் மக்கள் சத்தியத்தை மறுப்பதைக் கொண்டு விசனப்படாமல், அவர்கள் ஏற்றுக் கொள்ளும வகையில் நாம் செயல்பட வேண்டும் என்ற தப்பான முடிவுக்கு வராமல் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மக்கள் அனைவரும் அவர்களை ஒதுக்கித் தள்ளினாலும் அதனால் கவலைப்பட மாட்டார்கள். தங்களைப் பின்பற்றும் ஒரு நபர் கூட இல்லாத நிலையிலும் தனது பணியை செவ்வனே செய்த பல நபிமார்கள் அல்லாஹ்வின் திருப்தியுடன் சுவர்க்கம் நுழைவார்கள் என்ற நபிமொழியின் கருத்தை மனதில் கொண்டு உறுதியுடன் சத்தியத்தில் நிலைத்திருப்பார்கள்.
ஆனால் அதற்கு மாறாக மறுமையை குறிக்கோளாக கொள்ளாமல் இவ்வுலகில் பதவிகளையோ புகழையோ, பொன்னையோ பொருளையோ குறிக்கோளாகக் கொண்டு மார்க்க பிரசாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற மக்களின் திருப்தியைப் பெறவே குறியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. இது மனித இயல்பு. இதனை விட்டும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் தப்ப முடியாது. இதுப் பற்றி நபி(ஸல்) அவர்களையே அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கின்றான்.
(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சர்யப் படுத்தியபொழுதிலும் “தீயதும், நல்லதும் சமமாகா; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.” என்று நீர் கூறுவீராக” (5:100)
மேலும் மனிதர்களின் சில விருப்பங்களை ஏற்றுக் கொள்ளும் போது அவர்கள் நம்மை தங்கள் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்வார்கள். மக்களின் ஆதரவு அமோகமாக கிடைக்கம். அதே சமயம் அதன் பின் விளைவு மகா பயங்கரமானது என்பதை அழைப்புப் பணியாளர்கள் உணர வேண்டும். அது குறித்து அல்லாஹ் நபி(ஸல்) அவர்களையே எச்சரித்துள்ள வசனங்கள் வருமாறு:
(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டி கூறும்படி உம்மைத் திருப்பி விடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்கவில்லை எனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.
(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்) நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உதவியாளர் எவரையம் நீர் காணமாட்டீர். (17:73-75)
ஆக குர்ஆனின் இந்த எச்சரிக்கைகளை எல்லாம் கூர்ந்து அவதானித்து செயல்படும் சத்திய பிரச்சாரங்கள் எந்த நிலையிலும் மக்கள் கோபப்படுகிறார்கள், தனது சொல்லை செவிமடுக்க மறுக்கிறார்கள். என்ற காரணத்திற்காக உள்ளதை உள்ளபடி சொல்லுவதிலிருந்தும் பின்வாங்க முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிலதை விட்டு சிலதை சொல்லும் ஷைத்தானின் துர்போதனைக்கு ஆளாக மாட்டார்கள். இவர்கள் புத்தியில் சிறிய விஷயங்களாக படுபவற்றையெல்லாம் சொல்லாமல் விட்டு, இவர்கள் புத்தியில் பெரிய விஷயமாகப் படுபவற்றை மட்டும் சொல்லும் குற்ற செயல்களுக்கு ஆளாக மாட்டார்கள். அதாவது மார்க்கப் பிரசாரத்தில் தங்கள் மனித புத்தியை நுழைக்க மாட்டார்கள். விளைவுகள் தங்களின் சொந்த முயற்சிகளிலும் தங்களின் அனுமானங்களிலும் தங்கி இருக்கின்றன என தப்புக் கணக்குப் போடமாட்டார்கள். விளைவைப் பற்றி அக்கறைப்படாமல் அல்லாஹ்வின் உத்திரவுகளை எடுத்து வைப்பதே எமது கடமை என்பதை செவ்வனே உணர்ந்து செயல்படுவார்கள்.
“இன்னும் எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (36:17)
இந்த அல்லாஹ்வின் தெளிவான கட்டளையை சிரமேற்கொண்டு குர்ஆனிலும் ஹதீஸிலும் இருப்பதை மக்கள் முன் எடுத்து வைப்பதை விட வேறு அதிகாரம் தங்களுக்கில்லை என்பதை உணர்ந்து செயல்படுவார்கள். தங்கள் மனிதப் புத்தியைக் கொண்டும், அனுமானங்களைக் கொண்டும் மார்க்கப் பிரசாரத்தை திறம்பட செயல்படுத்த முடியும் என்ற அல்லாஹ்வை மறந்த எண்ணத்தை அதிக பிரசிங்கித் தனத்தை ஒரு போதும் மேற்க்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவர்களால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும்.
இது விஷயத்தில் யார் அல்லாஹ்வின் அருளைப் பெறவில்லையோ அவர்கள் மட்டும் அல்லாஹ்வை மறந்து தங்கள் சொந்த புத்தியைக் கொண்டும் மக்களின் ஆதரவைக் கொண்டும் சாதித்து விட முடியும் என்ற நச்சுக் கருத்துக்கு ஆளாவார்கள். தங்கள் சொந்த புத்தியில் உதித்ததை செயல்படுத்துவது கொண்டு மக்களில் ஒரு கூட்டம் அவர்களை நம்பி, அவர்கள் பின்னால் வர ஆரம்பித்து விட்டால், அவர்கள் தாங்கள் பெரிதாக சாதித்து விட்டதாக மனப்பால் குடிப்பார்கள். நேர்வழியில் இருக்கும் வரை கூட்டம் குறைவாக இருக்கும் நிலைமாறி, வழிதவறி விட்டால், பெருங்கூட்டம் பின்னால் வர ஆரம்பித்து விடும் என்ற உண்மையை 6:116 வசனத்தின் பொருளை உணரத்தவறி விடுகிறார்கள்.
மக்கள் நமது கருத்துக்களை ஆர்வமாகக் கேட்டு ஏற்றுக் கொள்கிறார்கள். கூட்டம் கூட்டமாக நம் பின்னால் வருகிறார்கள் என்பதெல்லாம் நாம் நேர்வழியில் நடக்கின்றோம் என்பதற்கு உரைகல் அல்ல. பயித்தியக்காரன் பின்னாலும் ஒரு கூட்டம் செல்லத்தான் செய்யும். இன்று வழிகேட்டின் உச்சக் கட்டத்தில் இருப்பவர்களின் பின்னால் தான் பெருங் கூட்டங்கள் இருக்கின்றன. நாம் நேர்வழியில் இருக்கிறோம் என்பதற்கு சரியான அளவுகோல் குர்ஆனும், ஹதீஸும் ஆகும். அவை எடுத்துச் சொல்லுபவை சிறிய விஷயங்களாக இருந்தாலும் பெரிய விஷயங்களாக இருந்தாலும் சிறிது பெரிது என நாமாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் முன் எடுத்து வைப்பதே பிரசாரகனின் கடமையாகும். நமது கடமைகளைச் செவ்வனே செய்யும் உண்மை பிரசாரர்களாக அல்லாஹ் நம்மை ஏற்று அருள் புரிவானாக.

 அந்நஜாத்
Post image for அல்லாஹ்வின் வாக்குறுதிகள்
செயலுக்கேற்ப கூலித் தரப்படும்:
* (நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.   (4:77)
* அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.   (8:60)
* அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு பரிபூரணமாத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.   (2:272)
* (நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக் கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவது போல்) அல்ல. அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இவ்விஷயத்தில்) எவரும் ஒரு அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.   (4:49)
* நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்)புத்தகம் நம்மிடம் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.        (23:62)
* ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு. ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பரிபூரணமாகப் பெறுவதற்காக. ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.   (46:19)
* எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான-நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட மாட்டார். (20:112)
* எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு நன்மை உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார்.     (6:160)
* தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டு, ஸாலிஹான (நற்) செயல்களைச் செய்கிறார்களோ அவர்களைத் தவிர; (மற்றவர்கள் நரகக் கேட்டை சந்திப்பார்கள்) அத்தகைய (ஸாலிஹான)வர்கள் ஜன்னத்(சுவர்க்கத்)தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டி நற்பயன்கள்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.   (19:60)
* நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.   (2:279)
* (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவர்களது வலது கரத்தில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.  (17:71)
* ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அல்லாஹ் அனுப்பிய இறை தூதர் உண்டு; அவர்களுடைய தூதர்(அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.   (10:47)
* பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; அவர்களது செயல் குறிப்பேடு அவர்கள் முன் வைக்கப்படும்; இன்னும் நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.  (36:69)
* அல்லாஹ் (தன்) அடியார்களுக்க அநியாயம் செய்ய நாட மாட்டான்.          (40:31)
A. முஹம்மது அலி

thanks to readislam.net