, , No Comments
மிஃராஜ் தரும் படிப்பினைகள்...! (பகுதி 2)




மிஃராஜை நினைவு கூரும்போது என்னதான் அந்நாளில் செய்ய வேண்டும் என்கிற கேள்வியோடு முதல் பகுதியை நிறுத்தியிருந்தோம். இதற்கு மிஃராஜின் பொழுது என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்று நபி(ஸல்) கூறும் அச்சம்பவத்தில் தெளிவான வழிகாட்டுதல் உள்ளது.
மிஃராஜின் பொழுது நடந்த முக்கிய சம்பவங்கள் என்னென்ன என்று பட்டியல் போடுவோமானால் கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்:
  1. நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜித் அல்-ஹராமிலிருந்து மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். அங்கு அவர்கள் தலைமையில் நபிமார்களுக்குத் தொழுகை நடக்கின்றது.
  2. நபி(ஸல்) அவர்கள் நபிமார்கள் அனைவரையும் சந்தித்து ஸலாம் கூறி நலம் விசாரிக்கின்றார்கள்.
  3. சுவர்க்கத்தின் மகத்துவம் காட்டப்படுகின்றது.
  4. அனாதைகளின் சொத்தை உண்டவன், வட்டி வாங்கியவன், விபச்சாரம் செய்தவன் இவர்களின் கோர நிலை நரகத்தில் காட்டப்படுகின்றது.
  5. திரும்பும் வழியில், நபி(ஸல்) அவர்களின் தொடர் கோரிக்கைக்குக் செவிகொடுத்து இறைவனால் ஐவேளைத் தொழுகை கடமையாக்கப்படுகின்றது.

    படிப்பினைகள் என எடுத்துக்கொள்ள வேண்டுமெனில், மேற்கண்ட ஐந்து நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்.
    இதில் ஒவ்வொன்றும் ஒரு நீண்ட வழிகாட்டுதலை இச்சமூகத்திற்கு வழங்குகின்றது. அதனை ஒவ்வொன்றாக மிகச் சுருக்கமாக இங்கு காணலாம்.
    • நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜித் அல்-ஹராமிலிருந்து மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். அங்கு அவர்கள் தலைமையில் நபிமார்களுக்குத் தொழுகை நடக்கின்றது.
    ஒரு பயணத்தின் துவக்கம் எவ்விதம் அமைய வேண்டும் என்பதற்குரிய வழிகாட்டலாக மிஃராஜின் துவக்க நிகழ்வான மஸ்ஜித் அல்-அக்ஸாவில் நடந்த இத்தொழுகையினைக் குறிப்பிடலாம். மிஃராஜின் இறுதியில்தான் முஸ்லிம்களுக்கு 5 வேளை தொழுகை கடமையாக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவன் எந்த நோக்கத்திற்காகப் பயணம் செய்கின்றானோ அவன் அந்நோக்கத்தை பெற்றுக் கொள்கின்றான், பிரயாணியின் பிரார்த்தனையை இறைவன் அங்கீகரிக்கின்றான் போன்ற நபி மொழிகளை இங்கு நினைவுகூர்தல் சிறப்பானதாகும்.

    ஒரு பயணத்தின் நோக்கம் பூர்த்தியடைய இறைவணக்கத்தைக் கொண்டு அப்பயணத்தைத் துவங்குதல் சிறப்பானது என்பது இங்கு உணர்த்தப்படுகின்றது. அதேவேளை நபி(ஸல்) அவர்களின் இந்த மிஃராஜ் பயணத்தின்போது அனைத்து நபிமார்களுக்கும் தலைமை ஏற்று நபி(ஸல்) அவர்களால் நடத்தப்பட்ட இத்தொழுகை தற்பொழுது உலக முஸ்லிம்களின் கிப்லாவான மஸ்ஜித் அல்-ஹராமில் நடக்காமல், முதல் கிப்லாவான மஸ்ஜித் அல்-அக்ஸாவில் நடந்தது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

    அனைத்து நபிமார்களும் இவ்வுலகில் ஒரே இடத்தில் கூடிய சிறப்பை வல்ல நாயன் ஒரு பள்ளிவாசலுக்கு கொடுக்கின்றான் எனில், அப்பள்ளிவாசல் இறைவனிடத்தில் எத்தகைய சிறப்புக்குரியதாக இருக்கும் என்பதைத் தனியாக கூறிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்பகால முஸ்லிம்களின் (தொழுகையில் முன்னோக்கப்படும் திச) கிப்லாவாக இருந்த பைத்துல் முகத்தஸ் எனும் மஸ்ஜித் அல்-அக்ஸாவிலிருந்து கிப்லாவை இன்றைய மஸ்ஜித் அல்-ஹராமிற்கு (கஃபா ஆலயம) இறைவன் மாற்றியது நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனையினாலாகும். அதுவரை முஸ்லிம்களாக வேடமிட்டு நபி(ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் ஏமாற்றிக் கொண்டிருந்த யூதர்களை மக்களுக்கு அடையாளம் காண்பிக்க அந்தக் கிப்லா மாற்றம் பெருந்துணையாக இருந்தது.

    கிப்லாவாக இருந்த பைத்துல் முகத்தஸ் மாற்றப்பட்டிருப்பினும் இறைவனிடத்தில் அதற்கு இருக்கும் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் தெளிவாக மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு நிகழ்ச்சியாகவே மிஃராஜின் பொழுது நடந்த இத்தொழுகை நிகழ்ச்சியைக் கருத முடிகின்றது.

    இதன் காரணத்தாலேயே அன்றுமுதல் இன்றுவரை ஃபலஸ்தீனத்தில் நிலைகொள்ளும் இறையில்லமான இந்த பைத்துல் முகத்தஸிற்காக ஆயிரமாயிரம் முஃமின்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து வருகின்றனர்.

    இந்தியாவில் 400 ஆண்டு காலப் பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜிதை தகர்த்த சங் பரிவாரத்திற்கு எதிராக இன்று அணி திரண்டு, அதே இடத்தில் பாபரி மஸ்ஜிதை கட்டியெழுப்பவும் மீண்டும் இதுபோன்ற அக்கிரமங்கள் நடக்காமல் தடுக்கவும் போராட முன்வந்திருக்கும் இந்திய முஸ்லிம்கள் ஒரு கணம் பைத்துல் முகத்தஸின் இன்றைய நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆரம்பகாலங்களில் உமர்(ரலி) அவர்கள் ஆரம்பித்து, பிற்காலத்தில் ஸலாஹுத்தீன் அய்யூபிவரை பைத்துல் முகத்தஸிற்காக மிகப்பெரும் தியாகங்களைச் செய்தது எதற்காக? இறைவனிடம் இத்துணை மகத்துவமும் சிறப்பும் பெற்ற பைத்துல் முகத்தஸை இறை விரோதிகளிடம் எப்படி விடுவது என்ற ஒரே காரணமன்றி வேறு என்ன இருக்க முடியும்?

    அன்று இஸ்லாத்தின் வீரச் செம்மல்களான இவர்களால் துவங்கப்பட்ட பைத்துல் முகத்தஸிற்கான இவ்வீரப் போராட்டம் இதோ, இன்றைய அதிநவீன நூற்றாண்டிலும் மிக வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. எகிப்திலும், ஃபலஸ்தீனிலும் உள்ள இஸ்லாமிய வீரர்கள் இதனை தீரத்துடன் செய்து வருகின்றனர். மீள்பார்வை இதழில் வெளியான இது தொடர்பான ஒரு கட்டுரையை இவ்விடத்தில் மறுவாசிப்பு செய்வது மெத்தப் பொருத்தமாக இருக்கும.

    ஃபலஸ்தீனை வெற்றிகொள்ளல் இஃக்வான்களின் முடிவுறாத போராட்டம்
    ஃபலஸ்தீன், உலக முஸ்லிம்களின் அகீதாவோடு தொடர்புப்பட்டபூமி.அல்குர் ஆன் அதனை பரக்கத் செய்யப்பட்டது என்கின்றது.நபிமார்களின் அனைவரது போராட்டத்திலும் ஃபலஸ்தீனுக்கு ஒரு முக்கிய இடம் இருந்திருக்கின்றது. உலகை ஆட்சி செய்த அனைத்து சமூகங்களும் ஃபலஸ்தீனை தமது ஆளுகைக்குள் கொண்டுவருவதற்காக கடும் பிரயத்தனங்கள் செய்திருக்கின்றன. ஏனெனில் ஃபலஸ்தீனை தம் கைவசம் வைத்திருக்கும் சமூகம் தான் உலகிற்கு தலைமையினை வழங்கியிருக்கின்றது.

    அந்தவகையில் இஸ்ரா நிகழ்வுடன் ஃபலஸ்தீன் பூமியின் தலைமை நபியவர்களிடம் அல்லாஹ் தஆலாவால் ஒப்படைக்கப்பட்டது. அந்த நம்பிக்கையின் விளைவால்தான் ஃபாலஸ்தீனை நோக்கிய படையெடுப்புகள் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. இறுதியில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஃபலஸ்தீன் முழுமையாக முஸ்லிம்களிடம் வருகிறது.

    இடைக்காலத்தில் சில வருடங்கள் முஸ்லிம்களிடமிருந்து ஃபலஸ்தீன் கிறிஸ்தவர்கள் கைக்கு நகர்ந்திருந்தாலும், ஸலாஹூத்தீன் அய்யூபியின் காரணமாக மீண்டும் ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் கைக்கு வருகிறது. அன்று முதல் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் கைகளில்தான் இருந்திருக்கிறது. 1948 மே மாதம் 15-ம் திகதியுடன் உத்தியோக பூர்வமாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டதுடன் பைத்துல்முகத்தஸ் உட்பட ஃபலஸ்தீனின் பெரும்பகுதி முஸ்லிம்களை விட்டுச்செல்கிறது.

    ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் அகீதாவில் ஒரு பகுதி, அது விட்டுக் கொடுக்கப்படக்கூடாது-இஸ்லாமிய உலகின் இதயத்தில் ஒரு யூத நாடு தோன்றிவிடக்கூடாது என்ற ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தவரின் போராட்டம். இன்று வரை தொடரும் போராட்டம். ஃபலஸ்தீன் முழுமையாக மீட்கப்படும் வரை நடைப்பெறப்போகும் போராட்டம்.

    ஃபாலஸ்தீன விவகாரத்தில் இவர்கள் ஆரம்பமுதலே கவனம் செலுத்தியிருக்கிறார்கள். 1930 களில் ஃபாலஸ்தீன விவகாரத்திற்கான தனிப்பிரிவு இஃக்வான்களால் உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக 1936ம் ஆண்டு புரட்சியில் அமீன் ஹுசைனியுடன் பல இஃக்வான்கள் பங்கு பெற்றனர். தொடர்ந்து, 1938ஆம் ஆண்டு நடைப்பட்ட இஸ்ஸுத்தீன் கஸ்ஸாம் புரட்சியுலும் பல இஃக்வான்கள் கலந்துக்கொண்டனர். பின்னர் ஃபலஸ்தீனுக்குள்ளேயே இருந்து செயல்படும் நோக்கில் 1946 ஆம் ஆண்டு இஃக்வான்களது கிளை ஒன்று ஃபலஸ்தீனில் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக ஜமால் ஹுசைனி என்பவர் நியமிக்கப்பட்டார்.

    மறுபுறத்தில் எகிப்துக்குள்ளே யூதர்களின் நடவடிக்கைகல் பலம் பெறத்தொடங்கின. 1943ஆம் ஆண்டு எகிப்தில் சியோனிச இயக்கத்தின் பிரிவு அரச அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது. 1944ஆம் ஆண்டு அலெக்சாந்திரியாவில் நடைப்பெற்ற அவர்களது மாநாட்டில் சாமாதானத்தில் மூலமோ அல்லது யுத்தத்தின் மூலமோ இஸ்ரேல் உருவாகியே தீரும் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். எகிப்தின் கம்பெனிகளில் 40 வீதமானவறை யூதர்களே தம் வசம் வைத்திருந்தார்கள். இந்த அபாயகரமான நிலையை எதிர்த்து இஃக்வான்கள் மாத்திரமே போர்க்கொடி தூக்கினார்கள்.

    இரண்டாம் உலகப்போரின்போது பிரித்தானிய அரசு எகிப்திய யூதக் கம்பெனிகளின் உதவியுடன் ஆயிரக்கணக்கான யூதர்களை ஆயுத ரீதியாக பயிற்றுவித்தது. அப்போது இஃக்வான்கள் மாத்திரமே தமது உரைகள் ஊடாகவும் துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் ஊடாகவும் இந்தக் கம்பெனிகளின் உற்பத்திகளை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள். பல மாநாடுகளை நடத்தினார்கள்.அரபுத்தலைவர்களை உசுப்பிவிட்டார்கள்.

    இதன் விளைவாக ஃபலஸ்தீனுக்கான முதலாவது அரபு மாநாடு நடைப்பெற்றது. அதன் விளைவாக அரபு நாடுகளை திருப்திப்படுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்கு பிரித்தானியா தள்ளப்பட்டது. எனவே லண்டனில் அரபிகளையும் யூதர்களையும் இணைத்து வட்டமேஜை மாநாட்டை நடத்தினார்கள். அதில் ஃபலஸ்தீனுக்குள்ளே யூதர்கள் மேற்க்கொள்ளும் சிறைப்பிடிப்புகளும் சித்திரவதைகளும் கொலைகளும் நிறுத்தப்படுவதற்கு உத்திரவாதம் தரப்பட்டது. அத்துடன் வெளியிடங்களிலிருந்து யூதர்கள் ஃபலஸ்தீனுக்கு வருவதில் ஒரு வரையறை இடப்பட்டது.

    இதனை யூதர்கள் அங்கீகரிக்கவில்லை. உடனே பிரித்தானியாவை விட்டுவிட்டு அமெரிக்காவிடம் போய் உதவிக்கேட்டார்கள். அதன் விளைவாக, அமெரிக்க-பிரித்தானிய நட்புறவு சபை உருவாக்கப்பட்டு அதன் தீர்மானத்தின் பிரகாரம் உடனடியாக ஒரு லட்சம் யூதர்கள் ஃபலஸ்தீனுக்கு அனுப்பப்பட அனுமதிக்கப்பட்டது. அத்துடன் யூதர்கள் ஃபலஸ்தீன நிலங்களை வாங்க விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது.

    தொடர்ந்தும் 1947 நவம்பர் 29ஆம் திகதி அமெரிக்க, பிரித்தானிய அழுத்தத்தின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபை ஃபலஸ்தீனை இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் தீர்மானத்தை வெளியிட்டது. ஒன்று யூதர்களுக்குரியது.மற்றையது அரபிகளுக்குரியது. இத்தீர்மானத்தை அரபுத்தலைவர்கள் எதிர்த்தார்கள்.

    இஃக்வான்கள் ஒரு பெரும் எதிர்ப்பு மாநாட்டை ஏற்பாடு செய்தார்கள். அதில் சவூதி அரேபியா,எகிப்து,சிரியா,சூடான் போன்ற நாடுகளின் பல அறிஞர்கள் கலந்துக்கொண்டனர். அந்த மாநாட்டில் உரையாற்றிய இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள், "ஃபலஸ்தீனே எமது இரத்தங்கள் உனக்கு அர்ப்பணமாகட்டும், இந்த மேடைமீது நின்று நான் உரத்துச்சொல்கிறேன். இஃக்வான்களில் பத்தாயிரம் பேர் ஃபலஸ்தீனில் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அழைப்பை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்" என்று அறிவிப்புச் செய்தார்கள்.

    மாநாட்டின் நிறைவில் ஃபலஸ்தீனைக் காப்பதற்கான உயர்சபை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் இமாமவர்களும் அங்கத்துவம் வகித்தார்கள். அவர்கள் ஃபலஸ்தீன போரட்டத்திற்கான ஆயுதங்களையும் நிதியையும் திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டார்கள்.

    1948ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி இஃக்வான்கள் ஆக்கிரமிக்கும் யூதர்களுக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்தார்கள். ஒவ்வொரு அங்கத்தவனும் ஜிஹாதிற்காக தன்னை தயார் படுத்திக் கொள்வதை கடமையாக்கினார்கள். இஃக்வான்களின் இந்த உறுதியைக் கண்ட பல தலைவர்களும் அவர்களுடன் ஒத்துழைக்க முன்வந்தார்கள். எகிப்திய அரசப்படையில் இருந்த பல தளபதிகள் தமது தொழிலை ராஜினாமா செய்துவிட்டு இஃக்வான்களது படையில் வந்து இணைந்துக்கொண்டனர்.

    இஃக்வான்களின் இராணுவ பயிற்சி சிரியாவில் நடைப்பெற்றது.அது முஸ்தபா ஸிபாஈ, உமர் பாஹாவுத்தீன் அல் அமீரி,முஹம்மத் ஹாமித், அப்துல்லாஹ் ஹில்லாக் போன்ற அன்றைய முக்கிய இஃக்வான்களின் தலைவர்களினது மேற்பார்வையில் நடைபெற்றது.உண்மையில் இந்த தலைவர்கள் நேரடியாக யுத்தத்தில் ஆயுதம் ஏந்திப்போராடினார்கள்.

    சிரியாவிலிருந்து வந்த படைக்கு முஸ்தபா ஸிபாஈ தலைமைத் தாங்கினார்கள். ஜோர்தானிலிருந்து வந்த படைக்கு அப்துல் லதீப் அபூகூரஃ தலைமை தாங்கினார்கள். ஈராக்கிலிருந்து வந்த படைக்கு முஹம்மத் மஹ்மூத் ஸவ்வாப் தலைமை தாங்கினார்கள். இவர்கள் தான் அன்றைய நாளில் அந்த நாடுகளில் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவர்களாகவும் காணப்பட்டார்கள்.

    யுத்தம் நடைபெறுகின்றபோது, முஸ்தபா ஸிபாஈ அவர்களை ஏனையவர்கள், அவர் நேரடியாக யுத்தத்தில் ஈடுபடாமல் தலைமையகத்தில் இருந்துகொண்டு மேற்பார்வை செய்தால் போதுமானது என்றார்கள். நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்ட முன் அனுபவங்கள் அவருக்கு குறைவு என்பதே காரணம். ஆனாலும் அதனை மறுதலித்த முஸ்தபா ஸிபாஈ அவர்கள் "நான் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக வேண்டும் என்பதற்காவன்றி வேறு எதற்காகவும் இங்கு வரவில்லை." என்றார்.எனவே அவரும் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டார்.

    உண்மையில் 1948ஆம் ஆண்டு யுத்தத்தில் இஃக்வான்கள் காட்டிய வீரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. மிகக்குறைந்த மனித வளங்களுடனும் மிகக் குறைந்த ஆயுதங்களுடனும்-ஆனால் மிக உயர்ந்த ஈமானுடனும் அவர்கள் போராடினார்கள். எனவே தான் அவர்கள் ஏனையவர்களை விட அதிகமாக சாதித்தார்கள்.

    தபத்86 என்னும் இடத்தை கைப்பற்றுவதற்கான போராட்டம் இடற்கு சான்றாக உள்ளது. எகிப்திய படையினர் 3ஆயிரம் பேருடன் மூன்று நாட்களாக போராடினார்கள். வெற்றி கிடைக்கவில்லை. படைத்தளபதி முஹம்மது நஜீப் என்பவர் கூட போராட்டத்தில் காயப்பட்டார். மூன்றாம் நாள் முடிவில் அவர்கள் இஃக்வான்களிடம் உதவிக்கேட்டார்கள். இஃக்வான்கள் 50 பேரை மாத்திரம் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் படையின் முன்னணியில் நின்று போராடினார்கள். ஒரே நாளில் அந்த இடம் கைப்பற்றப்பட்டது. யூதர்கள் வெருண்டோடினார்கள்.

    1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி திடீரன யுத்த நிறுத்தத்திற்கு அரபுத் தலைவர்கள் உடன்பட்டுவிட்டார்கள். ஃபலஸ்தீனில் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது பேரதிர்ச்சியைக் கொடுத்தது. முஸ்லிம்கள் வெற்றியின் உச்சத்தில் நிற்கின்றபோது முழுமையான வெற்றியை பெறுமுன்னர் ஏன் இந்த யுத்த நிறுத்தம்?

    யூதர்கள் தமக்குத்தேவையான் ஆயுதங்களை வரவழைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்த யுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபையைக் கொண்டு வந்தது. இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் விரைந்துச் செயல்பட்டார்கள். அரபுத் தலைவர்களுக்கு இந்த விடையத்தை தெளிவுப்படுத்த முற்பட்டார்கள். விளைவாக யுத்தம் மீண்டும் ஆரம்பித்த போதிலும் அது நீடிக்கவில்லை.

    இரண்டாவது தடவையாகவும் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இந்தத் தடவை யூதர்கள் நவீனகரமான ஆயுதங்களைக் கொண்டு குவித்தார்கள். யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளபோதே அதைப்பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாது, புதிய ஆயுதங்கள் கொடுத்த தைரியத்தில் முஸ்லிம்களைக் கொடூரமாக தாக்கத் தொடங்கினார்கள். முஸ்லிம்களுக்கு ஆயுதங்களைக்கொண்டு சேர்ப்பதற்கு அரபுத் தலைவர்களே தடையாக இருந்தார்கள். சில பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் படைகள் பலவந்தமாய் வாபஸ் வாங்க வைக்கப்பட்டன.

    எகிப்திய இஃக்வான்களின் படையினர் மேலகப் பயிற்சி என்ற போர்வையில் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். யூதர்கள் இஃக்வான்களில் கைதாவோரை சராசரி கைதியாக கருதாமல் போர்க் குற்றவாளிகள் என்று கூறி கொடூரமாகக் கொலைச் செய்தார்கள். இறுதியில் இது போன்ற சதிகளின் விளைவாக முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கும் யூதர்களுக்கு முன்னால் தோற்றுப் போனார்கள். ஃபலஸ்தீன் பரிதாபமாய் ஆக்கிரமிக்கும் யூதர்களின் கைகளில் விழுந்தது.

    இந்த யுத்தம்தான், உலகிற்கு இஃக்வான்களின் பலத்தை அறிய வைத்தது. இதன் பின்னர்தான் இமாம் ஹஸனுல் பன்னா கொலை செய்யப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு மேற்குலகம் வந்தது. 1948ஆம் ஆண்டு "ரோஸ் காரீப்" எனும் யூதப்பெண் பத்திரிகையாளர் ஒருவர் "சண்டே மிரர்" எனும் பத்திரிக்கைக்கு எழுதிய ஒரு கட்டுரையில் இஃக்வான்களைப்பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

    "தற்பொழுது இஃவானுல் முஸ்லிமூன் என்னும் ஈர்ப்புமிக்க இந்தப் பெயருக்குப்பின்னால் உள்ள அந்த மனிதர்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. தற்போது ஃபலஸ்தீனில் உள்ள யூதர்கள்தான் இவர்களது மிகப்பெரிய எதிரிகள். யூதர்கள்தான் இவர்களது அடிப்படை இலக்கு. மத்திய கிழக்கின் பல நகரங்களில் இதன் அங்கத்தவர்கள் யூதர்களின் சொத்துகளை அழிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் தற்பொழுது பஹ்ரைனிலும் யெமனிலும் யூதர்கள் மீது அத்துமீற ஆயத்தமாகிறார்கள். அவர்கள் தான் அமெரிக்கக் கவுன்சில்களை தாக்கியவர்கள்.

    பகிரங்கமாகவே அரபு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேறவேண்டும் எனக்கேட்டுள்ளனர். ஃபலஸ்தீனிலுள்ள யூத நாடு ஐக்கிய நாடுகள் சபையிடம் எதிர்பார்ப்பது நாட்டை இரண்டாகப் பிரிக்கும் அதன் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் சர்வதேசப் படைகளையல்ல. மாற்றமாக இஃவனுல் முஸ்லிமூன்களை நேருக்கு நேர் நின்று எதிர்க்கத் தகுதியான படைகளைத்தான் எதிர்ப்பாக்கிறார்கள். இந்த இயக்கத்தின் பெயரில் இருக்கும் அடிப்படை அபாயத்தை உலகம் அறிந்து கொள்ளவேண்டும்.

    மிக அவசரமாக உலகம் அந்த உண்மையை உணர்ந்துக் கொள்ளவில்லையெனின், ஐரோப்பா இந்த நூற்றாண்டின் கடந்த நாட்களில் நாஸிஸ இயக்கத்திடம் கண்டதை இங்கேயும் காணவேண்டியிருக்கும்.வட அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரையிலும்-துருக்கி முதல் இந்தியாவரையிலும் பரந்த ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை ஐரோப்பா எதிர்க்கொள்ள வேண்டிவரும்."

    இவை யூதப்பெண் எழுத்தாளர் ஒருவரின் வார்த்தைகள். மிகப்பெரிய உண்மைகள் விஷம் கலந்து தரப்பட்டிருக்கின்றன. இந்த உண்மைகள் ஃபலஸ்தீன் விவகாரத்தில் இஃக்வான்களின் பாரிய பங்களிப்புகளுக்கு போதிய சான்றுகளாகும். இஃக்வான்கள் ஒரு பெரும் சக்தி என்பதை அன்றே அங்கீகரித்துவிட்டனர். அவர்களால்தான் ஃபலஸ்தீனும் உலகின் செல்வாக்கும் மேற்குலகிற்கு கிடைக்காமல் போக முடியும் என்றுக் கண்டனர். எனவேதான் இன்று வரைக்கும் மேற்குலகின் பிரதான எதிரியாக அவர்கள் பார்க்கப்படுகின்றனர். அல்லாஹ் அவர்களை வெற்றிபெறச்செய்வானாக.

    நன்றி: மீள்பார்வை மே 2007
    கணினியாக்கம்: சகோ. செய்யது அலி




    வ்வாறு இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகட்டத்திலிருந்து பைத்துல் முகத்தஸ் இஸ்லாமிய உலகோடு பின்னிப் பிணைந்தே காணப்படுகின்றது. முஸ்லிம்களின் இரத்தத்தோடு கலந்த உணர்வு என்று கூறும் அளவிற்கு பைத்துல் முகத்தஸ் இன்று இஸ்லாத்தின் நிலைநிற்பிற்கான முக்கியத்துவம் பெற்றதன் காரணத்தை மிஃராஜின் தொழுகை நிகழ்ச்சி தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
    நபி(ஸல்) அவர்களின் மிஃராஜ் பிரயாணத்தின் மூலம் முஸ்லிம்களுக்குக் கிடைக்க வேண்டிய உணர்வு இவ்வாறிருக்க, இன்று மிஃராஜ் நினைவு கூர்தல் என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களுக்கு அப்பிரயாணத்தில் பயன்பட்ட புராக் என்ற யாரும் பார்த்திராத வாகனத்திற்கு ஒரு வினோத உருவம் கொடுத்து, சிறு பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்த பொம்மைகள் கிடைக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியைப் போன்று அதனை வீட்டில் சட்டம் போடு மாட்டி வைத்துக் கொண்டு பூரிப்படைவதில் என்ன பிரயோஜனம் இருக்கின்றது? இன்று உலகில் இறைவனிடம் மிகப்பெரும் மதிப்பு வாய்ந்த அந்த இறை இல்லத்திற்காக, நபி(ஸல்) அவர்கள் முதல், இவ்வுலகில் அதற்கு முன்னர் வந்துள்ள அனைத்து நபிமார்களும் ஒருங்கே ஒரே நேரத்தில் கூடித் தொழுத சிறப்பு வாய்ந்த இஸ்லாமிய சமூகத்தின் இதயநாடியான மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்காக ஒரு கூட்டம் முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகம் செய்து கொண்டிருக்கும் வேளையில், கையில் புராக் என்ற பெயரில் ஒரு வினோதப் படத்தை வைத்துக் கொண்டு மிஃராஜ் நினைவு கூர்தல் எனத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் மற்றொரு சாராரை நினைத்துப் பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை.

    முஸ்லிம் சமூகத்தின் புராக் என்ற பெயரில் பட ஆராதனைச் செயல்களும், சடங்குகளும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத வணக்கங்களும் யூதர்களின் சூழ்ச்சிகளுக்கு எதிராகக் குடும்பம் குடும்பமாகத் தங்கள் இன்னுயிரை மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்காக ஈந்து கொண்டிருக்கும் அந்த ஷஹீத்களின் போராட்டங்களைக் கேலி செய்வதாகவும் பைத்துல் முகத்திஸை முஸ்லிம்களின் மனங்களிலிருந்து அப்புறப்படுத்த சூழ்ச்சி வலை பின்னும் யூதர்களுக்குத் துணையாகவும் இருக்கும் என்பதை இச்செயல்களில் ஈடுபடும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் உணர வேண்டும்.
    • நபி(ஸல்) அவர்கள் நபிமார்கள் அனைவரையும் சந்தித்து ஸலாம் கூறி நலம் விசாரிக்கின்றார்கள்.
    மிஃராஜ் பயணத்தின் மற்றுமோர் அரிய படிப்பினையாக நபிமார்களுக்கு ஸலாம் கூறி நலம் விசாரித்த இந்நிகழ்வைக் குறிப்பிடலாம். இவ்விடம், முஃமின்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாவர் ... ”; ஸலாத்தினைக் கொண்டு சமாதானத்தைப் பரப்புங்கள்; நலம் விசாரித்தலும், சலாம் கூறலும் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளாகும் என்பன போன்ற நபிமொழிகள் நினைவு கூரத்தக்கன.
    இறைவனின் அருளுக்குப் பாத்திரமான இஸ்லாமியச் சமூகம் இன்று உலகில் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்திற்குமான அடிப்படைத் தவறு இங்கே இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
    சகோதரத்துவத்தைத் தலையாய கடமையை போன்று வலியுறுத்தும் இஸ்லாத்தில் இருந்து கொண்டு மூச்சுக்கு முன்னூறு தரம் ஒற்றுமை, சகோதரத்துவம் என வாய், கை வலிக்கப் பேசவும் எழுதவும் செய்யும் இன்றைய இஸ்லாமியத் தலைவர்களிடையே, அவர்கள் ஒரே கொள்கை, கருத்து, சிந்தனையில் இருந்தாலுங்கூட ஒருவொருக்கொருவர் குறைந்தபட்சம் ஸலாம் மட்டுமாவது சொல்லிக் கொள்கின்றார்களா? என்றால் இல்லை என்கிற துர்பாக்கிய நிலையைக் காண்கிறோம்.
    ஒருமுறை சென்னை மண்ணடியில் உள்ள ஒரு பள்ளிவாசலில், துவக்கத்தில் ஒரே சிந்தனையில் ஒரே இடத்தில் பயிற்சி பெற்று, பின்னர் வெவ்வேறு இயக்கங்களாக பரிணமித்த இருபெரும் சமூகத் தலைவர்கள் ஒரு ஜும்ஆ தொழுகையின் பொழுது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுகூட சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சில நல்ல உள்ளங்களின் முயற்சியினால் முன்னெடுக்கப்பட்ட சம்பவமே. ஆனால், நடந்தது என்ன? தொழுகை முடிந்து இருவரும் வெளியேறும் இடத்தில் ஒருவொருக்கொருவர் நேரில் சந்தித்துக் கொண்ட பொழுது குறைந்த பட்சம் ஒரு சலாம் கூட கூறிக்கொள்ளும் மனநிலையில் இல்லாமல் அவரவர், அவரவர் வழியில் பிரிந்து சென்றனர்.
    இவ்வுலக நன்மையில் மட்டும் நாட்டம் வைத்து, மேடைகளிலும் பத்திரிக்கைகளிலும் சரமாரியாக ஒருவர் மீது ஒருவர் அநாகரிக வசைமாரி பொழிந்து கொண்டு, நாட்டு மக்களின் சொத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் கவனமாக ஒன்று சேர்ந்து போட்டி போடும் அரசியல் கட்சி தலைவர்கள்கூட, நேரில் சந்திக்கும் பொழுது ஒரு மரியாதைக்காகவாது நலம் விசாரித்துக் கொள்கின்றனர். இந்த ஒரு சாதாரண நாகரிகச் செயலைக்கூட முஸ்லிம் இயக்கத் தலைவர்களிடம் காணமுடிவதில்லை. இதுதான் இவர்கள் கற்ற இஸ்லாமிய பழக்க வழக்கங்களா?
    சகோதரர்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக்கூடாது என்பதையும், முதலில் சலாமுக்கு யார் முந்திக் கொள்கின்றார்களோ அவர்களே அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்” என்பதையும் இவர்கள்தாமே இச்சமுதாயத்தைச் சேர்ந்த எளிய மக்களுக்கும் மேடையில் பேசிப் புரிய வைத்தார்கள்?. இப்படிப்பட்டவர்கள் ஒற்றுமை, சகோதரத்துவம் எனக் கூறி யாரை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்?.
    இஸ்லாம் தனது ஒவ்வொரு வழிகாட்டுதலிலும் இது போன்று சகோதரத்துவத்தையும் அதனைப் பேணுவதன் அவசியத்தையும் வலியுறுத்தும் பொழுது, அதனைப் போதித்துச் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் இவ்வாறு ஒவ்வொரு திசையில் சமூகத்தை பிளவுபடுத்திக் கொண்டு இருக்க, சமூகத்தின் ஒரு பகுதி மக்களோ, சகோதரத்துவத்தை வளர்க்கும் விதத்தில் நினைவுகூர வேண்டிய இதுபோன்ற இஸ்லாமிய நிகழ்வுகளில் ஒருவொருக்கொருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி யார் வழிகெட்டவர், யார் நேர்வழி பெற்றவர் என்ற மயிர் பிளக்கும் ஆராய்ச்சி செய்து கொண்டு திரிகின்றனர். மிஃராஜ் பயண நிகழ்ச்சி மனதில் எழும் பொழுதே நபி(ஸல்) அவர்கள் சந்தித்த நபிமார்களுக்கு ஸலாம் கூறி நலம் விசாரித்த சம்பவம் நினைவில் வந்து உடனடியாக, தான் அதுவரை பேசாமல் பிணங்கிக் கொண்டிருக்கும் சகோதரரை அழைத்து நலம் விசாரித்து சலாம் கூற வேண்டாமோ?
    • சுவர்க்கத்தின் மகத்துவம் காட்டப்படுகின்றது.
    நபி(ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் நிகழ்வின் பொழுது ஏழு வானம் கடந்த உடன் முதலில் அவர்களுக்கு சுவர்க்கத்தின் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இது இஸ்லாமிய வழிகாட்டுதலின் சிறப்பான ஓர் அடிப்படையாகும்.
    இஸ்லாம் எதையும் நன்மையிலிருந்தும், நல்ல விஷயங்களிலிருந்தும் ஆரம்பிக்கக் கூறுகின்றது. திருக்குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் உற்று நோக்குபவர்களுக்கு இது மிகஎளிதாக விளங்கும். இஸ்லாம் நன்மையை ஏவித் தீமையை தடுக்கக் கூறுகின்றது. அதாவது தீமையைத் தடுத்து விட்டு, நன்மையை ஏவக் கூறவில்லை. ஆனால் தீமையைத் தடுக்கும் பொழுது நன்மைக்கான வழிகாட்டுதலைக் கொடுத்துத் தீமையைத் தடுக்கக் கூறுகின்றது. அதே போன்றே, ஒரு விஷயத்தைக் குறித்து அறிவுரை கூறும் பொழுது முதலில் நல்ல விஷயங்களைப் பேசி அதில் ஆர்வமூட்டிக் கொண்டு பின்னர் தீமைகளையும் தவறுகளையும் குறித்து பட்டியலிட்டு, தீமைகளிலிருந்து விலகாமலிருப்பதால் விளையும் கேடுகளை விவரிக்கின்றது. இது போன்றே சுவர்க்கம் நரகம் விஷயத்திலும் இஸ்லாம் ஒப்பீட்டு விளக்கம் கூறுகின்றது.
    நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பக் காலகட்டங்களில் அவர்களின் செயல்திட்டம் முதலில் மக்களை நன்மையை நோக்கி அழைப்பதிலேயே குறியாக இருந்தது. நன்மையை இஸ்லாத்தை நோக்கிய அழைப்பிற்கான அவசியத்தைக் குறித்து விவரிக்கும் பொழுது, இஸ்லாத்தை ஏற்காமல் இருப்பதால் விளையும் தீமைகளை விவரிக்கும் நரகத்திற்குரிய வசனங்கள் இறங்கின. சாதாரணமாகவே ஒருவிஷயத்தைக் குறித்து மக்களிடம் பேசும் பொழுது முதலில் நல்ல விஷயங்களுடன் ஆரம்பிக்கும் பொழுது, அதில் மக்களின் கவனம் முழுமையாக திரும்பும். இந்த வகையில் விண்ணேற்றத்தின்போது நபி(ஸல்) அவர்களுக்கு முதலில் சுவர்க்கத்தின் வளங்கள் காண்பிக்கப்பட்டு, பின்னர் நரகத்தின் கொடுமைகள் காண்பித்துத் தரப்பட்டன.
    சுவர்க்க, நரகக் காட்சிகள் நபி(ஸல்) அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது மிஃராஜ் பயணத்தின் மூலம் இச்சமூகத்திற்கு இறைவன் அறிவித்துக் கொடுக்கும் மிகப்பெரிய அத்தாட்சியாகும். கண்களால் காணாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் சுவர்க்கம், நரகத்தை நம்பி இஸ்லாத்தை ஏற்றிருக்கும் முஸ்லிம்களுக்கும், இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா என விட்டேற்றியாக நம்பாமல் இருக்கும் மற்ற மக்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கு நேரில் அவற்றை காண்பித்துக் கொடுத்து அவை எதுவும் பொய்களல்ல; அனைத்தும் உண்மைகளே என ஆணித்தரமாக எடுத்துக்கூறி மக்களை நேர்வழிக்குக் கொண்டுவர இறைவன் செய்த மிகப்பெரும் அற்புதம்தான் இந்நிகழ்ச்சியாகும். அல்லாஹ்வின் தூதரின் சொற்களில் அசையாத நம்பிக்கை கொண்டவர்கள், அந்தப் பேரற்புத நிகழ்வுகளைத் தங்கள் நபியின் நாவின் மூலம் இந்நிகழ்வில் நடந்ததையெல்லாம் தங்கள் கண்களால் கண்டனர். அதன் மூலம் நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் நம்பிக்கையில் அதிகம் உறுதிபடவும், அங்கும் இங்குமாக அலைபாய்ந்து கொண்டிருப்பவர்கள் இஸ்லாத்தை உறுதியாக நம்பவும், நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதன் உண்மை நிலையை எடுத்துக் கூறி அதற்குச் சாட்சியாக இருந்து கொண்டு அவர்களை இஸ்லாத்தில் அழைக்கவும் இறைவன் செய்த மகத்தான காரியமே இந்நிகழ்வாகும்.

    எனவே இஸ்லாத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தி மேலும் வீரியத்துடன் மக்களிடையே சுவர்க்கம், நரகத்தின் உண்மை நிலையினை விளக்கிக் கூறி இஸ்லாத்தை எடுத்துச் செல்ல ஊக்கம் வழங்கும் இச்சிறப்பு மிகு மிஃராஜ் சம்பவத்தின் பெயரைக் கூறிக் கொண்டு, இஸ்லாம் காட்டித்தராத அனாச்சாரங்களைச் செய்து கொண்டிருப்பது எவ்வகையில் இறைவனிடத்தில் பொருத்தத்திற்குரிய செயலாகும் என்பதை இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் சிந்தித்து அவற்றைக் கைவிடவேண்டும்.
    • அனாதைகளின் சொத்தை உண்டவன், வட்டி வாங்கியவன், விபச்சாரம் செய்தவன் இவர்களின் கோர நிலை நரகில் காட்டப்படுகின்றது.
    மக்கள் தங்களுக்குள்ளும் பிறருக்கும் செய்யும் தீமைகளினால் விளையக் கூடிய மிகக் கொடிய தண்டனைகளைக் குறித்து ஆதாரத்துடன் கூறும் வகையில் நபி(ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் நிகழ்வில் காட்டப்பட்ட நரகக்காட்சிகள் அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக அனாதைகளின் சொத்துகளை அநியாயமாக அபகரித்து உண்டவர்கள், மக்களின் உழைப்பை அநியாயமான முறையில் வட்டி மூலம் உண்டவர்கள் மற்றும் விபச்சாரம் செய்து கொண்டிருந்தவர்கள் அனுபவிக்கும் தண்டனைகளை மட்டும் குறிப்பாக எடுத்துக் காட்டியதிலிருந்து இம்மூன்று பாவங்களும் இறைவனிடத்தில் எவ்வளவு வெறுப்புக்குரிய செயல்கள் என்று அறியமுடிகின்றது.

    உண்மையிலேயே இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்று, இறைவனின் மீதும் இறை மார்க்கத்தின் மீதும் அதீத அன்பு வைத்துள்ளவன் ஒருபோதும் இத்தகைய பாவங்களைச் செய்யலாகாது என்பதைத் தனியாக எடுத்துக் கூறி உணர்த்தும் வகையிலும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

    உலகில் இன்று வட்டியின் மூலம் கொழுக்கும் முதலாளிகள் ஒரு பக்கம் பெருகிச் செல்ல, அதனால் வாழ்வதற்கு வசிப்பிடம்கூட இல்லாமல், உண்பதற்கு உணவில்லாத நிலையில், பல குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ளுதல் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது.

    தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், வங்கியிலிருந்து வாங்கிய கடனை அடைக்க இயலாமல் குடும்பத்தோடு மாண்டு போன ஏழை விவசாயிகள் ஏராளம். வட மாநிலம் ஒன்றில் இந்திய வங்கியிலிருந்து வாங்கிய கடனை குறிப்பிட்ட தினத்தில் அடைக்க இயலாமல் வங்கியினர் கொடுத்த கொடும் தொல்லை தாங்க முடியாமல் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட கொடுமையும் நடந்தது. இவ்வாறு இன்று மக்களை ஆளும் அரசாங்கமே வட்டியை ஏழை மக்கள்மீது சுமத்தி அவர்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்து கொண்டு வருகின்றது.

    தன்னைச் சுற்றி ஓர் அநியாயம் நடக்கக்கண்டால் அதனைக் கையால் தடுக்க வேண்டும்; இயலவில்லை எனில் அதனை வாயால் தடுக்க வேண்டும்; அதற்கும் இயவில்லையேல் விட்டு ஒதுங்கி விட வேண்டும்; இது ஈமானின் கடைசி நிலையாகும் என்ற எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களின் கட்டளையை மனதில் ஏற்றிருக்கும் இந்நடுநிலை சமுதாயம், இந்த அநியாயங்களைக் கண்டு எதிர்த்துப் போராடி அவைகளைக் களையவும், அப்பாவிகளைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முனைய வேண்டிய இவ்வுயர்ந்த சமுதாய அங்கங்கள் குறைந்த பட்சம், அப்படிப்பட்ட அநியாயத்திலிருந்து ஒதுங்கி ஈமானின் கடை நிலையிலாவது வாழ்கின்றதா? என்பதை உற்று நோக்கினால் அதிர்ச்சியே மேலோங்குகிறது.

    வட்டியின் கொடுமையையும், அதனால் விளையும் கெடுதியையும் உணர்த்தும் இந்த மிஃராஜ் சம்பவத்தைக் காரணம் வைத்து இஸ்லாம் காட்டித்தராத பல்வேறு சம்பவங்களைச் செய்ய முன்வரும் இஸ்லாமிய சகோதரர்கள், மிஃராஜ் சம்பவம் உண்மையிலேயே தரும் படிப்பினையான வட்டிக்கு எதிராகப் போராடும் சிந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக உழைக்க முன்வரவேண்டும்.
    • திரும்பும் வழியில், நபி(ஸல்) அவர்களின் தொடர் கோரிக்கைக்குச் செவிகொடுத்து இறைவனால் ஐவேளைத் தொழுகை கடமையாக்கப் படுகின்றது.
    இச்சம்பவத்தில் இரு விஷயங்கள் இச்சமூகத்திற்கு உணர்த்தப்படுகின்றன. முதலாவது,
    தினசரி 5 வேளைத் தொழுகை கட்டாயக் கடமை என உணர்த்தப்படுகின்றது. அது தினசரி 50 வேளையாக இருந்தது; இறைவனின் மிகப்பெரும் கருணையினால் குறைக்கப்பட்டது என்பதும் தெளிவிக்கப்பட்டுள்ளது.
    இரண்டாவது,
    இறைவனிடம் கேட்பதற்கு எவ்வித வரம்பும் இல்லையெனவும், என்ன கேட்டாலும், எவ்வளவு முறை கேட்டாலும் வாரி வழங்கும் மிகப்பெரும் கொடையாளன், அன்பு உள்ளம் படைத்தவன்தான் இவ்வுலக இறைவன் எனவும், அவ்வாறு கேட்பவர்களுக்கு நிச்சயம் வல்ல நாயன் பதிலளிக்கின்றான் என்பதையும் ஆதாரத்துடனும் இங்குச் சுட்டி உணர்த்தப்படுகின்றது.

    இன்னும் நான் குறைக்கக் கேட்டிருந்தால் வல்ல இறைவன் குறைத்திருப்பான்; ஆனால் இதற்குமேல் குறைத்துக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது; எனவே திரும்பி விட்டேன் என எம்பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை ஐந்து வேளையாகக் குறைத்தாலும் "இதை ஒவ்வொரு நாளின் ஐவேளையும் முறையாகக் கடைபிடிப்பவர்களுக்கு ஐம்பது வேளைத் தொழுகையின் நன்மையளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்தும், பிரார்த்தனை செய்வதன் முக்கியத்துவமும், கேட்பவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பாத மிகப்பெரும் கொடையாளன் தான் இறைவன் என்பதும் தெளிவாகின்றது.

    ஒருநாளைக்கு 50 முறை என்பதை 5 ஆகக் குறைத்துக் கருணை காட்டிய அந்த இறைவனை மனதார ஏற்றுக் கொண்ட இச்சமூகத்தில் உள்ள ஒரு பெரும் கூட்டத்தினரான மக்களே தொழுகையின் முக்கியத்துவத்தையும், பிரார்த்தனையின் முக்கியத்துவத்தினையும் அறியாமல் இருக்கும் பொழுது அவர்களிடம் இப்புனித மிஃராஜின் சிந்தனையாக, கேட்பவர்களுக்கு வாரி வழங்கும் இறைவனின் மகிமையையும் இஸ்லாத்தின் மகத்துவத்தையும் எடுத்துச் சொல்வது இந்நாளினை நினைவு கூர்வது ஆகாதோ? அதனை விடுத்து இப்புனிதமிகு சம்பவம் நிகழ்ந்த இரவின் பெயரைக் கூறிக் கொண்டே இஸ்லாமும், நபி(ஸல்) அவர்களும் கற்றுத்தராத அனாச்சார செயல்களையும், தஸ்பீஹ் என்ற பெயரில் புதியதொரு தொழுகையையும் நிறைவேற்றுவதும் இரவு முழுவதும் விழித்திருந்து இல்லாத தொழுகையைத் தொழுததனால், கடமையாக்கப்பட்ட ஃபஜ்ருத் தொழுகையைத் தொழாமல் தூங்கி விடுவதும் எத்தகைய கொடிய பாவமான செயல் என்பதை நாம் உணர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும்.

    எனவே மிஃராஜ் என்பது ஏதோ இரவு முழுவதும் விழித்திருந்து இஸ்லாம் காண்பித்துத் தராத செயல்களை செய்வதற்கோ, அனாச்சாரங்களையும் கட்டுக்கதைகளையும் நம்பி அறியாமையில் வீழ்வதற்கானதோ அல்ல. இந்நாளை மனதில் நினைத்தாலே, இறைவனின் மகத்துவமிக்க இல்லமான பைத்துல் முகத்தஸ் கண்முன் வரவேண்டும். அதனை மீட்டெடுப்பதற்காக அன்றுமுதல் இன்றுவரை வீர மரணம் எய்யும் வீரப்போராட்ட சகோதர, சகோதரிகள் நினைவுக்கு வரவேண்டும். இறைவனின் இல்ல மீட்புகான போராட்டத்தில் நம் பங்கு என்ன? என்பதைக் குறித்த சிந்தனையும் திட்டங்களும் மனதில் உதிக்க வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டெடுப்பதற்காக ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டிய அவசியத்தையும் அதனைச் செயல்படுத்துவதற்கான அடிமட்ட கட்டமான ஒருவருக்கொருவர் ஸலாம் கூறி நலம் விசாரிக்கும் எளிய வழிமுறையும் நினைவுக்கு வர வேண்டும். அவ்வாறான ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் சிந்தப்படும் இரத்தத்திற்கு இறை சந்நிதியில் கிடைக்கும் மகத்தான பதவிகளைக் குறித்து நினைவு வரவேண்டும்.
    இவற்றை விடுத்து, சகோதரத்துவ சிந்தையின்றி சமூகத்தை பிளவுபடுத்திக் கொண்டு சென்றாலோ, இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட்டாலோ அல்லது வட்டி, விபச்சாரம்,போன்ற ஏனைய பாவமான காரியங்களில் ஈடுபட்டாலோ கிடைக்கும் நரக வேதனையை குறித்து மனதில் பயம் ஏற்பட வேண்டும். அப்படிப்பட்ட நரக வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றி, சுவனத்தின் உயர் அந்தஸ்தையும் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தினைத் தருமாறும் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைத் தொழுகைகளிலும் வல்ல நாயனிடம் இறைஞ்சி துஆச் செய்யவேண்டும்.

    இதுவே நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் எனும் விண்ணேற்ற நிகழ்வின் நினைவுபடுத்தல்களாகவும் படிப்பினையாகவும் முஸ்லிம் சமுதாயத்தால் என்றென்றும் அடையாளப்படுத்தப்பட வேண்டும்!

    தொடர் நிறைவுற்றது.

    நன்றி:சத்யமார்க்கம்

    0 comments:

    Post a Comment