திருக்குர்ஆனை அணுகும் முறை (1)

, , No Comments


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

திருக்குர்ஆன் ஆய்வு பற்றிய இந்த விளக்கவுரையை இரு நோக்கங்களை முன்வைத்து எழுதியுள்ளேன்.

முதலாவதாக:
ஒரு சாதாரண வாசகர் திருக்குர்ஆனின் கருத்துகளை ஆய்ந்து பார்ப்பதற்கு முன்னர், அதன் பொருளை எளிமையான முறையில் விளங்கிக்கொள்ள உதவும் சில விஷயங்களை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்; அப்படியில்லையென்றால் திருமறையை ஆய்ந்து பார்க்கும் வேளையில் இவை திரும்பத் திரும்ப வாசகரின் மனதில் குறுக்கிடும்; இவற்றை அறிந்து கொள்ளவில்லையென்றால் மனிதன் குர்ஆனுடைய அர்த்தத்தின் விளிம்பிலேயே சுற்றிக்கொண்டிருப்பானே தவிர, அதன் ஆழத்தில் இறங்கும் வாய்ப்பே அவனுக்குக் கிடைக்காது.

இரண்டாவதாக:
 திருக்குர்ஆனை அறிந்து கொள்ள முயலும் நேரத்தில் மக்களின் சிந்தையில் பொதுவாகத் தோன்றும் பல கேள்விகளுக்குரிய பதில்களை முன்கூட்டியே தந்துவிட வேண்டும். முற்றிலும் தனிப்பாணி நாம் வழக்கமாகப் படிக்கும் நூல்களில், பொதுவாகவே குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றிய விளக்கங்களும், கருத்துகளும், ஆதாரங்களும் ஒரு தனித்தன்மை வாய்ந்த, நூலாக்க வடிவில் தொகுக்கப்பட்டு ஒரே சீரான முறையில் அமைக்கப்படுகின்றன.

திருக்குர்ஆனைப் பற்றி முன்னரே தெரிந்திராத ஒருவர், அதை முதன் முதலாகப் படித்து அறிந்து கொள்ள முற்படும் போது ஒரு நூல் எனும் முறையில் அதில் சாதாரண இதர புத்தகங்களில் இருப்பது போல், கருத்துரைகள் பற்றிய முன்குறிப்பு தரப்பட்டிருக்கும்; பின்னர் அசல் விவாதப் பொருளை அத்தியாயங்களாகவும், துணைத் தலைப்புகளாகவும் பிரித்துத் தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரச்னை பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கும் என்றும், இவ்வாறே வாழ்வின் பல்வேறு துறைகளையும் தனித்தனியாகப் பிரித்து அதற்குரிய கட்டளைகள், விதிகள், அறிவுரைகள் ஆகியவை தொடர்ச்சியாக விளக்கப்பட்டிருக்கும் என்றும் இயல்பாகவே எண்ணுவார்.


ஆனால் இந்த வேதத்தை எடுத்து ஆராயத் துவங்கும்போது, அவர் நினைத்ததற்கு முற்றிலும் மாறாக, அவர் இதற்கு முன் சிறிதும் அறிந்திராத ஒரு புதிய பாணியில் விஷயங்கள் அமைந்திருப்பதைக் காண்கிறார்.

சமயக்கோட்பாடுகளும், ஒழுக்க நெறிகளும், ஷரீஅத்தின் சட்டதிட்டங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. சத்திய அழைப்பும், நீதி போதனைகளும், படிப்பினை புகட்டும் அறிவுரைகளும் இதில் காணப்படுகின்றன.

பல விஷயங்கள் பற்றிய விமர்சனங்களும், தவறான போக்குகளைக் கண்டிக்கும் வாசகங்களும், அச்சமூட்டி எச்சரிக்கும் செய்திகளும், நற்செய்தி கூறும் விஷயங்களும், மன அமைதிக்கான மாண்புறு அறிவுரைகளும் இதில் எடுத்துரைக்கப்படுகின்றன. மேலும், விவாதிக்கப்படும் விஷயங்கள் பற்றிய ஆதாரங்களும் சான்றுகளும் இதில் தரப்பட்டுள்ளன. வரலாற்று நிகழ்ச்சிகளும், அண்டங்களின் அமைப்பு பற்றிய குறிப்புகளும் இதில் காணப்படுகின்றன.

ஆனால், இவை யாவும் தனித் தனியாக இல்லாமல் குர்ஆனுக்கே உரிய பாணியில் ஒன்றன் பின் ஒன்றாக வருவதை அவர் காண்கிறார். சில சமயம் ஒரே பொருள் பலவிதங்களில் பல்வேறு விதமான சொற்பிரயோகங்களுடன் திரும்பத் திரும்பக் கூறப்படுவதுண்டு. ஒரு கருத்துரைக்குப் பின்னர் மற்றொன்று திடுமென்று தொடங்கிவிடுவதுமுண்டு.

சில சமயம் ஒரு விஷயத்தைப் பற்றிய விவரத்தின் இடையே பிறிதொரு விஷயக் குறிப்பு திடீரென்று வருதலுமுண்டு. சொல்பவர், சொல்லப்படுவோர், சொல்லப்படும் திசை ஆகியன மாறிமாறிச் செல்வதுமுண்டு. திருக்குர்ஆனில் வரலாற்று நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. ஆனால் அவை வரலாற்று நூல்களில் காணும் பாணியிலல்ல.

இதில் மெய்யறிவு, தத்துவம் பற்றிய சர்ச்சைகள் இருக்கின்றன; தத்துவ நூல்களில் காணப்படும் போக்கிலல்ல. இதில் மனிதனைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும் விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன; ஆனால் இயற்கை விஞ்ஞான நூல்களில் கூறப்படும் வகையில் அல்ல. சமூகவியல், அரசியல், பொருளியல், வாழ்வியல் ஆகியவற்றோடு தொடர்புள்ள பிரச்னைகள் இங்கு விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் விவாத முறைப்படியல்ல. இதில் சட்டப்பிரச்னைகள், அதற்குரிய விவாதங்கள், அடிப்படைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அவையோ சட்ட நூல்களில் காணப்படும் பாணிக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன.

இதில் ஒழுக்கத்தைப் பற்றிய அறிவுரைகள் அருளப்பட்டிருக்கின்றன; ஆனால் ஒழுக்கவியல் நூல்கள் அனைத்திலிருந்தும் மாறுபட்ட பாணியில் அவை கூறப்பட்டிருக்கின்றன. எனவே நூலமைப்பு பற்றி தாம் கொண்டுள்ள கருத்துகளுக்கெல்லாம் முற்றிலும் வேறுபட்ட அமைப்பில் குர்ஆன் அமைந்திருப்பதைப் பார்க்கும் அவர் குழம்பிவிடுகிறார்.

இது சிறிய, பெரிய பல்வேறு தனித்தனிப் பொருள்களைப் பற்றிய வாக்கியமாகும் என்றும், இது தொடர்போ, முறையான அமைப்போ, ஒன்றுக்கொன்று இணைப்போ இல்லாத, அங்குமிங்குமாய்ச் சிதறிக் கிடக்கும் ஓர் உரையாகும் என்றும், இவ்வாறு இணைப்பற்ற வாக்கியங்களை தொடர்ச்சியாக எழுதி, ஒரு நூல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கருதுகின்றார்.

குரோத மனப்பான்மையுடன் இதைப் பார்ப்பவரோ, தன்னுடைய ஆட்சேபணையைக் கிளப்புவதற்கும், குறைகள் காணுவதற்கும் இதனை ஆதாரமாகக் கொள்ள முற்படுகிறார்.

நல்லெண்ணத்தோடு தோக்குபவரோ, மேற்சொன்ன அமைப்பில் ஏற்படும் ஐயப்பாடுகளிலிருந்து
தம்மைக் காத்துக் கொள்ளச் சிலசமயம் பொருளைப் பற்றிக் கவனியாமல் இருந்துவிடுகிறார்.

சிலசமயம் வெளிப்படையாகத் தென்படும் ஓர் ஒழுங்கற்ற அமைப்புக்குப் பல பொருள்களைக்கற்பித்து மனதை ஆறுதல் படுத்திக்கொள்ள முயல்கிறார்.

இன்னும் சிலசமயமோ வாக்கியங்களிடையே செயற்கையான தொடர்புகளை உண்டுபண்ணி வினோதமான முடிவுகளை எடுக்கிறார். சிலசமயம், "பலதரப்பட்ட விஷயங்களைத் தொடர்பில்லாமல் கூறும் வாக்கியம் இது'' எனும் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறார்.

இதன் காரணமாக ஒவ்வொரு வசனத்தையும் அதற்குரிய சூழ்நிலையிலிருந்து பிரித்து அதற்குள் வினோதமான பொருள்களைப் புகுத்திவிடுகிறார். அப்பொருள்களோ, இவ்வாக்கியங்களைக் கொண்டு இறைவன் விளக்க நாடிய கருத்துகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கின்றன!

ஒரு நூலை நல்ல முறையில் விளங்கிக் கொள்ள வேண்டு மென்றால், அதனைப் படிப்போருக்கு அதன் விவாதப் பொருளைப் பற்றித் தெரிந்திருப்பது இன்றியமையாத் தேவையாகும்.

அதன் இலட்சியம், மையக்கருத்து, நோக்கம் ஆகியவை பற்றி அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதனுடைய விளக்கும் முறை பற்றியும் அதனுடைய மொழிமரபு பற்றியும், விஷயங்களை அது எடுத்துரைக்கும் தோரணை பற்றியும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட வாக்கியமோ, வாக்கியங்களோ தமது வெளிப்படையான கருத்தோடு என்ன பின்னணியைக் கொண்டுள்ளன, எத்தகைய நிலைகள் அல்லது எந்த நிகழ்ச்சிகளோடு அவை தொடர்பு கொண்டுள்ளன என்பதும் கருத்தில் இருக்க வேண்டும்.


சாதாரணமாக நாம் படிக்கும் நூல்களில் இவை வெகு எளிதில் தெரிந்து விடுகின்றன. எனவே அவற்றின் ஆழிய கருத்துகளைப் புரிந்து கொள்வதில் எத்தகைய சிரமமும் இருப்பதில்லை.

ஆனால் இவை நமக்கு அவ்வாறு எளிதில் குர்ஆனில் கிடைப்பதில்லை. எனவே சாதாரண ஒரு நூலைப் படிக்கும் மனப்பாங்கோடு எவரேனும் குர்ஆனை ஓதி உணர முற்பட்டால் அதன் உள்ளக்கிடக்கை, மையக்கருத்து, நோக்கம் ஆகியவற்றுக்கான அறிகுறியைக்கூட அவரால் காணமுடிவதில்லை.

அத்தகையோருக்கு அதன் தோரணையும், விளக்கும் முறையும்கூடப் புதுமையாகவும், அந்நியமாகவும் தென்படும். பல இடங்களில் வாக்கியங்களின் பின்னணிகள் அவர் பார்வைக்கு வருவதேயில்லை. இவற்றின் காரணமாக சாதாரணமான ஒரு வாசகர் அங்குமிங்குமாக குர்ஆனில் சில நன்முத்துக்களை எடுத்துப்பயன்படுத்திக் கொண்டாலும் கூட இறைமறையின் அசல் "ரூஹை'' அதன் உயிரோட்டத்தை அவர் உணர்வதில்லை.

ஆக இந்த உயர் மறையின் ஞானத்தை எய்துவதற்குப் பதிலாக, அதன் பயன்களில் சிலவற்றை மட்டும் பெற்று மனநிறைவு அடைகிறார். பலர் குர்ஆனைப் படித்து விதவிதமான ஐயப்பாடுகளில் சிக்கி உழல்வதற்குக் காரணம், இந்த மறையை உணர்வதற்கான அடிப்படை அம்சங்களை அவர்கள் அறியாதிருப்பதேயாகும்.

இந்நிலையில் குர்ஆனைப் படிக்கும்போது அதனுடைய பக்கங்களில் பல்வேறு கருத்துகள் தொடர்பில்லாமல் சிதறிக் கிடப்பதாக அவருக்குத் தென்படுகிறது. பல வாக்கியங்களின் பொருள்கள் விவேகத்தின் பேரொளியில் ஜொலிப்பதை அவர் காண்கிறார். ஆனால், அக்கட்டத்தில், ஒரு தொடர்பும் இணைப்பும் இல்லாமல் அவை தனித்து நிற்கின்றனவே என்ற நினைப்பே அவர் உள்ளத்தில் கிளர்ந்தெழுகிறது.

பல்வேறு கட்டங்களில் குர்ஆனின் விளக்கும் முறையையும். தோரணையையும் அறியாதிருப்பதால், வாக்கியத்தின் அசல் கருத்திலிருந்தும் பொருளிலிருந்தும் அவர் வெகுதூரம் விலகிச் சென்றுவிடுகிறார். எண்ணற்ற இடங்களில் வாக்கியத்தின் பின்னணி பற்றியும், அதற்குரிய சூழ்நிலை பற்றியும் அறியாதிருப்பதின் காரணமாக அவ்வாக்கி யத்தின் பொருள் குறித்து பலவிதத் தவறான எண்ணங்கள் கொள்ளும் நிலைக்கு ஆளாகி விடுகின்றார்.

குர்ஆன் தரும் அடிப்படை விஷயங்கள்

திருக்குர்ஆன் எவ்வகையான நூல்? அது இறங்கிய விதமும் அதில் வகுக்கப்பட்டிருக்கும் ஒழுங்கு முறையும் யாவை? அதில் விவாதிக்கும் பிரச்னைகள் யாவை? அதன் வாதங்கள் அனைத்தும் எந்த நோக்கத்தைக் கொண்டு அமைந்துள்ளன? அதன் பலதரப்பட்ட பொருள் விளக்கங்கள் எந்த மையக்கருத்துடன் இணைக்கப்பட்டுள்ளன?

 தன்னுடைய நோக்கத்தை விளக்க எத்தகைய ஆதாரங்களை அது அளிக்கின்றது? எத்தகைய தோரணையைக் கடைப்பிடிக்கிறது? இவற்றுக்கும் இவை போன்ற அடிப்படையான கேள்விகளுக்கும் தெளிவாக, நேராகத் தொடக்கத்திலேயே ஒருவருக்கு விடை கிடைத்துவிட்டால் பல ஐயப்பாடுகள், தவறான எண்ணங்கள் ஆகிய அபாயங்களில் சிக்கிக் கொள்ளாமல் அவர் தப்பித்துக் கொள்வார்! குர்ஆனை அறிந்து கொள்வதற்கும், அதன் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொள்வதற்குமான வழிகள் அவருக்கு எளிதாகிவிடும்.

 சாதாரண நூல்களிலுள்ள அமைப்பு முறையைக் குர்ஆனில் தேட முற்பட்டு அதை அங்குக் காணாது, பக்கங்களைப் புரட்டி ஒருவர் மயங்கி நிற்பதற்குக் காரணம், அவர் குர்ஆனைப் படிப்பதற்கு வேண்டிய இந்த அடிப்படைகளை அறியாமலிருப்பதேயாகும். "மதப் பிரச்னைகள் பற்றிய ஒரு நூல்'' எனும் கருத்துடன் அவர் இதைப் படிக்க முயல்கின்றார்.

"மதப் பிரச்னை" பற்றியும் "நூல்' பற்றியும் பொதுவாக நிலவும் கருத்துகளே அவர் சிந்தனையில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இங்கோ, தம் சிந்தையில் உள்ள உருவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதோர் அமைப்பே அவர்முன் தோன்றுகிறது;

அது அவருக்கு மிகவும் புதுமையாகவும், அந்நியமாகவும் தென்படுகிறது. இதனால் விவாதிக்கப்பட்டிருக்கும் பொருள் அவர் சிந்தனையில் படியாமலே போய்விடுகின்றது. ஊருக்குப் புதியவ ரொருவர் எப்படி அதன் வீதிகளில் வழிதெரியாமல் தடுமாறு வாரோ அது போலவே குர்ஆனின் வாசகங்களுக்கிடையே இங்குமங்கும் அவர் அலைமோதுகின்றார்.
ஆனால், ""நீங்கள் படிக்கப்போகும் இந்த நூல் உலகிலுள்ள நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியில் அமைந்துள்ளது.

அதன் அமைப்பு முறை அதற்கே உரித்தானது; விவாதிக்கும் பிரச்னைகள், விதிமுறைகள் ஆகியனயாவும் இதர இலக்கிய நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன; எனவே பொதுவாக நூலைப்பற்றி உங்கள் மனதில் குடியேறியுள்ள கருத்து இந்த நூலை ஆய்ந்து உணரத் துணையாயிராது என்பது மட்டுமல்ல, அது இவ்வழியில் ஒரு தடைக்கல்லாகவே இருக்கும்.

 எனவே இதை உய்த்துணர்ந்து கொள்ள நீங்கள் விரும்பினால் நூல்களின் அமைப்பு பற்றி உங்கள் மனதில் ஏற்கனவே குடி புகுந்திருக்கும் கருத்துகளை அகற்றி விடுங்கள்; பிறகு இந்த நூலில் அமையப் பெற்றிருக்கும் வினோதமான தன்மைகளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்'' என்று அதனைப் படிக்கத் துவங்கும் முன்பே குர்ஆனை ஆய்பவர்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டால் அவர்கள் இந்த வழிமாறாட்டத்திலிருந்து காக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆனைப் படிக்க முற்படுவோர், யாவற்றுக்கும் முன்பாக அதனுடைய அடிப்படையை நன்கு அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதன் மீது அவர் நம்பிக்கை கொள்ளலாம்; கொள்ளாமலுமிருக்கலாம். ஆனால் திருக்குர் ஆனைப் படித்துணர வேண்டுமாயின் எந்த விஷயத்தைத் தனது அடிப்படையென்று அது கூறுகிறதோ, அதனைச் சமர்ப்பித்தவர் (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) எதனை அதனுடைய அடிப்படையென்று தெளிவுபடுத்தினார்களோ அதனையே இந்த மறையின் அடிப்படையென்று முதலில் ஏற்றுக்கொண்டு மேலே படிக்க முனைவது அவசியமாகும்.

அந்த அடிப்படை விஷயங்களாவன:

(1) சர்வ வல்லமையுள்ள இறைவன் இப்பிரபஞ்சத்தின் படைப்பாளனும், உரிமையாளனும், ஆணையாளனுமாயிருக்கின்றான். அவனே தன்னுடைய பேரரசின் ஒரு பகுதியான இப்பூமியில் மனிதனைத் தோற்றுவித்து உணரவும், சிந்திக்கவும், அறியவும் வேண்டிய ஆற்றலை அவனுக்கு அளித்தான்.

 நல்லது எது, தீயது எது என்று பகுத்துணரக்கூடிய அறிவைத் தந்தான். பிறகு அவற்றிலிருந்து எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொண்டு செயல்படச் சுதந்திரமும் அருளினான். வாழ்க்கைச் சாதனங்களைப் பயன்படுத்த உரிமைகளை வழங்கினான். சுருக்கமாகச் சொல்வதென்றால், மனிதனுக்கு ஒருவகைப்பட்ட சுயாதிகாரத்தைத் (autonomy) தந்து, அவனை இப்பூவுலகில் தன்னுடைய பிரதிநிதியாய் (vicegerent) ஆக்கினான்.

(2) மனிதனைத் தன் கலீஃபாவாக (பிரதிநிதியாக) நியமித்த பொழுது மனதில் நன்றாகப் பதியும் வகையில், அவனுடைய நிலை பற்றிய அடிப்படைகளைத் தெளிவாக இறைவன் அறிவித்து விட்டான்.

"உங்களுடையவும், அனைத்துலகங்களுடையவும் உரிமையாளனும், வணக்கத்திற்குரியவனும், ஆணையாளனும் நான்தான்:

 என்னுடைய இந்தப் பேரரசில் நீங்கள் சுயாதிகாரம் படைத்தவர்களல்லர். பிறருக்கு அடிமைப்பட்டவர்களுமல்லர்; நீங்கள் கீழ்ப்படிவதற்கும், அடிபணிவதற்கும், வணங்குவதற்கும் உரியவன் என்னைத் தவிர வேறு யாருமில்லை; உங்களுக்குச் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டு நீங்கள் இவ்வுலகத்துக்கு அனுப்பப்படுகிறீர்கள்.

உண்மையில் இது ஒரு பெரிய தேர்வுக் காலமாகும்; இது ஒரு குறித்த காலம் வரை நீடிக்கும்; அதன் பின்னர் நீங்கள் என்னிடமே திரும்பி வரவேண்டியவர்களாய் இருக்கின்றீர்கள்.

அப்பொழுது உங்களுடைய செயல்களைப் பரிசீலித்து உங்களில் யார் தோல்வியடைந்தார்கள் என்று தீர்ப்பு வழங்குவேன்; எனவே வணங்குவதற்கும், ஆணை பிறப்பிப்பதற்கும் உரிய ஏக இறைவன் என்று என்னை ஏற்றுக்கொண்டு நான் இறக்கியருளிய அறிவுரைகள், வழிகாட்டுதலுக்கு ஏற்ப இப்பூவுலகில் செயல்படுவதுதான் உங்களுக்குரிய நேரிய வழியாகும்;

மேலும் நீங்கள் இவ்வுலகைத் தேர்வுக்கூடமாகக் கருதி வாழ்க்கை நடத்த வேண்டும்; மறுமையில் என்னுடைய இறுதித் தீர்ப்பில் வெற்றி பெறுவதே உங்கள் வாழ்வின் அடிப்படை நோக்கமாக அமைய வேண்டும்; இந்த உணர்வை உள்ளத்தில் கொண்டு மேற்சொன்ன உண்மையின் அடிப்படை யில் வாழ்வதே உங்களுக்குரிய சீரியநேரிய ஒழுங்குமுறையாகும்.

இதற்கு மாற்றமாக இவ்வுலக வாழ்வில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு போக்கும் மிகத் தவறானதாகவே இருக்கும். முதலில் சொல்லப்பட்ட நேரிய வழியை நீங்கள் மேற்கொண்டால் (அதை மேற்கொள்ள உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு) உலகில் அமைதியும், பாதுகாப்பும் உங்களுக்குக் கிடைக்கும்.

மேலும் என்னிடம் திரும்பி வரும்போது ஜன்னத் சொர்க்கம் என்று சொல்லப்படும் நித்திய சுகத்தையும், நிலையான பேரின்ப வீட்டையும் உங்களுக்கு அளிப்பேன். ஆனால் அந்த ஒழுங்கு முறையை விட்டு நீங்கள் வேறு முறையில் நடந்தால் (அவ்வாறு நடக்கவும் உங்களுக்க முழுச் சுதந்திரம் உண்டு)உலகில் குழப்பம், அமைதியின்மை ஆகியவற்றையே நீங்கள் சுவைக்க வேண்டியிருக்கும்!

பிறகு இவ்வுலகை விட்டு என்னிடம் மீளும்போது நீங்காத துயரமும், வேதனையுமுடைய நரகம் எனும் படுகுழியில் தூக்கி எறியப்படுவீர்கள்!'' என்று இறைவன் எச்சரித்து விட்டான்.

(3) இவ்வாறு எச்சரித்த பிறகு, பூவுலகின் முதல் மனிதர்களான ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவருக்கும் அவர்களும் அவர்களுடைய சந்ததியினரும் பின்பற்றிச் செயல்பட வேண்டிய அறிவுரைகளை வழங்கி உலகில் தோன்றச் செய்தான்.

ஆதி மனிதர்களான இவ்விருவரும் இருளிலும் அறியாமையிலும் தம் கண்களைத் திறக்க வில்லை. மாறாக, முழுமையான அறிவொளி நிறைந்ததாய்த்தான் இறைவன் அவர்களுடைய உலக வாழ்க்கையைத் தொடங்கச் செய்தான்.

 வாழ்வின் உண்மைகளை அவர்கள் அறிந்தேயிருந்தார்கள். வாழ்வின் நெறி அவர்களுக்குக் காண்பித்துக் கொடுக்கப்பட்டேயிருந்தது. இறைவனுக்கு அடிபணிவதாக (இஸ்லாமாக)வே அவர்களுடைய வாழ்க்கைமுறை அமைந்திருந்தது.

மேலும் இறைவனுக்கு அடிபணிபவர் (முஸ்லிம்) களாகவே வாழுங்கள் என்று தம்முடைய வழித்தோன்றல்களுக்கு அவர்கள் அறிவுறுத்திச் சென்றிருந்தனர். ஆனால் படிப்படியாக, பிந்திய நூற்றாண்டுகளில் அவர்களின் வழித்தோன்றல்கள் இந்த நேரிய சீரிய நெறிமுறையை (தீனை) விட்டு வழுவித் தவறான பல்வேறு பாதைகளில் செல்லத் தலைப் பட்டனர். அசட்டையினாலும், விழிப்பின்மையினாலும் அந்த வழிகாட்டுதலை கைநழுவ விட்டுவிட்டனர்.

மேலும் தம் குறும்புத்தனத்தால் அதனை அலங்கோலப்படுத்திக் குழப்பி விட்டனர். இறைமையுடன் பல்வேறு மனிதர்களையும் இணை வைத்தனர். சில சமயம் பல இயற்கைப் படைப்புகளையும், தம் கற்பனையில் உதித்த உருவங்களையும் இறைவனுடன் இணையாக்கிக் கொண்டனர்.

அவர்கள் இறைவன் அளித்த அந்த உண்மை (அல் இல்மு கூடஞு ஓணணிதீடூஞுஞீஞ்ஞு) அறிவுடன் விதவிதமான மூடநம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும், தத்துவங்களையும் கலந்து எண்ணற்ற மார்க்கங்களை உண்டுபண்ணினர்.

இறைவன் நிர்ணயித்துள்ள நீதிமிக்க நேர்மையான சமுதாய அமைப்புக்கு வேண்டிய ஒழக்க நியதிகளைக் (ஷரீஅத்தை) கைவிட்டு விலகி, அதனை அலங்கோலப்படுத்தி, அதற்குப்பதிலாகத் தம் இச்சைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்ப வாழ்வின் சட்டதிட்டங்களை இயற்றிக் கொண்டனர். இதனால் இறைவனுடைய பூமி அநீதியாலும், கொடுமைகளாலும் நிரம்பி விட்டது.

(4) நேரிய வாழ்க்கைநெறியிலிருந்து பிறழ்ந்து குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கும் மனிதனைப் பலவந்தமாக நேர்வழியின் பக்கம் இட்டுச் செல்வது இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கும் கட்டுப்பாடுள்ள சுதந்திரத்துக்கு இசைவாக இராது.

 எனவே, நேர்வழியில் செல்லும்படி மனிதனை கட்டாயப் படுத்த இறைவன் தன் சக்திகளைப் பயன்படுத்தவில்லை. மேலும் இந்த இனத்துக்கு இதில் தோன்றும் சமுதாயங்களுக்கு செயல்படும் ஒரு வரம்பை இறைவன் நிர்ணயித்துள்ளான்.

மனிதர்கள் இறைநெறியை எதிர்த்து நடக்கத் தலைப்பட்ட உடனேயே அவர்களை அழித்துவிடுவது இறைவன் நிர்ணயித்துள்ள செயல்படும் காலத்தவணைக்கு இசைவுடையதாய் இராது.

எனவே இறைநெறியிலிருந்து முகம் திருப்பிச் செல்லும் மனிதர்களை இறைவன் உடனடியாக அழிக்கவுமில்லை; நேர்வழியின் பால் திரும்பிவரக் கட்டாயப்படுத்தவுமில்லை.

இவற்றுக்குப் பதிலாக இவ்வுலகில் மனித வாழ்க்கை தோன்றிய காலந்தொட்டு அவனுடைய கட்டுப்பாடுள்ள சுதந்திரத்தை மதித்து, தேர்வுக்கூடமான இவ்வுலகில் செயல்படுவதற்கு அவனுக்குரிய காலகட்டத்தில், அவனுக்கு நேர்வழி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டேயிருக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக்கொண்டான்.

தன்மீது தானே விதித்துக்கொண்ட இப்பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தன்மீது நம்பிக்கை (ஈமான்) கொண்ட தன் விருப்பத்தையே நாடிச் செயல்படுகிற நல்லடியார்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களைத் தன் தூதர்களாய் நியமித்தான்.

 தன் செய்திகளையும் கட்டளைகளையும் அவர்களிடம் அனுப்பினான். வாழ்வின் அடிப்படை உண்மைகள் பற்றிய அறிவை அவர்களுக்கு அருளினான்; சீரான வாழ்க்கை முறை, வாழ்க்கைச் சட்டதிட்டங்கள் ஆகியவற்றை அவர்களுக்கு வழங்கினான்.

ஆதமுடைய மக்களில் நேர்வழியிலிருந்து பிறழ்ந்து சென்ற மனிதர்களை ஆதியில் அவர்களுக்குக் காண்பிக்கப்பட்ட அதே நேர்வழியின் பால் அழைக்கும் பணியில் அத்தூதர்களை நியமித்தான்.

(5) இந்த இறைத்தூதர்கள் பல சமுதாயங்களிலும் பல நாடுகளிலும் தோன்றினார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியாக இறைத்தூதர்கள் வந்து கொண்டேயிருந்தனர். ஆயிரமாயிரம் எண்ணிக்கையில் அவர்கள் அனுப்பப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும் "தீன்" ஒன்றாகவேயிருந்தது. அதாவது வாழ்வின் சீரிய ஒழுங்குமுறை என்று ஆதி மனிதருக்கு எது காண்பிக்கப்பட்டதோ அந்த முறையே சரியானது என்று இவர்களும் அறிவித்துக்கொண்டு வந்தனர்.

அவர்களனைவரும் ஒரே அறிவுரையையே பின்பற்றுபவர்களாய் இருந்து வந்தனர். அதாவது, உலக வாழ்வின் ஒழுக்கவியல், சமூகவியல் ஆகியவற்றுக்கு எந்த நிலையான அடிப்படை விதிகள் ஆதிமனிதருக்குக் காண்பிக்கப்பட்டனவோ அவற்றையே இவர்கள் பின்பற்றி நடப்பவர்களாய் இருந்தனர்.

 இவர்களனைவருக்கும் வாழ்க்கைக் குறிக்கோள், பணி (Mission) ஒன்றாகவே இருந்தது. அதாவது இந்த தீனின் வழிகாட்டுதலின் பக்கம் வருமாறு மக்கள் குலத்துக்கு அழைப்பு விடுப்பதும், பின்னர் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டோரை ஒரு குழுவி(உம்மத்தி)னராய் அமைத்து விடுவதுடன் அக்குழுவினரைச் சுயமாக தம் வாழ்வில் இறைவனுடைய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கச் செய்வதும், உலகில் இறைச்சட்டத்துக்கு இசைந்த வாழ்வை நிலைப்படுத்தச் செய்வதும், அச்சட்டதிட்டங்களுக்கு மாறு செய்ய முற்படுவோரைத் தடுக்கப்பாடுபடச் செய்வதுமே அத்தூதர்கள் அனைவரின் ஒரே குறிக்கோளாய் இருந்தது.

இவ்வாறு வந்த நபிமார்கள் (இறைத்தூதர்கள்) அவரவர் காலங்களில் தங்களுடைய இந்தக் குறிக்கோளை மிகவும் அழகாக நிறைவேற்றி வைத்தார்கள். ஆனால் எப்போதும் மனித சமுதாயத்தின் ஒருபெரும் பகுதி அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்ளவேயில்லை. நபிமார்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, "உம்மத்தே முஸ்லிமா' (அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கட்டுப்பாடான முறையில்வாழும் குழு)வாகத் திகழ்ந்தோரும் காலப்போக்கில் பல பிணிகளுக்கு ஆளாயினர். இவை எதுவரை முற்றிவிட்டிருந்தன வென்றால் அவர்களில் சில பிரிவினர் இறைவன் அருளிய வாழ்க்கை நெறியைக் கைநழுவவிட்டனர்: சிலரோ, இறைவழி காட்டுதலைத் திருத்தி, மாற்றிப் பல கலப்படங்களைச் செய்து, அதனை அலங்கோலப்படுத்திக் குழப்பிவிட்டனர்.

(6) இறுதியாக, அனைத்துலகங்களின் இறைவன், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அரபு நாட்டில் தோற்றுவித்தான். முந்திய நபிமார்கள் எந்தப் பணிக்காக அனுப்பப்பட்டனரோ அதே பணியை நிறைவேற்றும் பொறுப்பில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அமர்த்தினான். அவர்கள் இதற்குமுன் இறைவேதம் அருளப்படாத மக்கள் அனைவரையும், முந்தைய நபிமார்கள் மூலமாக நேர்வழியைப் பெற்று அதிலிருந்து நழுவிவிட்டவர்களையும் நோக்கித் தம் அழைப்பை விளக்கினார்கள். ஆதி மனிதருக்குக் காண்பிக்கப்பட்ட அதே நேரிய வாழ்க்கை முறையை மேற்கொள்ளும்படி அனைவருக்கும் அழைப்புவிடுத்து இறைவனுடைய அறிவுரையை அனைவரிடமும் எட்டச் செய்து அதனை ஏற்றுக்கொள்வோரை, ஒருபுறம் தங்கள் வாழ்க்கையை இறைநெறியின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவும், மறுபுறம் அதற்கு இசைவாக உலகைச் சீர்திருத்தவும் பாடுபடக் கூடிய ஒரு குழுவாக (உம்மத்தாக) அமைத்து விடுவதுதான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியாக இருந்தது. மேற்சொன்ன அழைப்பையும் நல்லுரையையும் கொண்ட வேத நூல்தான் அல்லாஹ், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களுக்கு அருளிய அல்குர்ஆன் ஆகும்.

thanksto:nidur

0 comments:

Post a Comment