ஜும்ஆத் தொழுகைக்குச் செல்ல இடையூறு ஏற்பட்டால்...?

, , No Comments
ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும்


என் பெயர் ரியாஸ். துபையில் ஒரு நிறுவனத்தில் புதிதாக இணைந்து பணி புரிகிறேன்.

வெள்ளிக்கிழமைகளிலும் வேலை செய்யும்படியான என் பணிச்சூழலில், ஜும்மா தொழுகைக்கு பள்ளிக்குச் செல்ல என்னை அனுமதிக்க வேண்டும் என்று என் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்திருந்தேன்.


--------------------------------------------------------------------------------

ஆனால், வேலைக்கு சேர்ந்தபின்னர் என்னை ஜும்மா தொழுகையை (4 கி.மீ தொலைவில் உள்ள) பள்ளிக்குச் சென்று தொழ அனுமதிக்க என் மேலாளர் மறுக்கிறார். நிறுவன வளாகத்திலுள்ள தொழும் அறையில் சென்று தொழ மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனால், கடந்த வாரம் முதல் ஜும்மா தொழுகையை லுஹர் தொழுகையாக மட்டுமே தொழுது வருகிறேன்.

மூன்று ஜும்மா தொழுகைகளை தொடர்ச்சியாக விட்டுவிட்டால் காஃபிர் என்ற ஹதீஸை அறிந்த காரணத்தால் அஞ்சுகிறேன். தயவு செய்து அறிவுறுத்துங்கள். (தமிழில் தட்டச்சு செய்யாமைக்கு மன்னிக்கவும்.) நன்றி.

மின்னஞ்சல் வழியாக ரியாஸ் அஹ்மத்.

தெளிவு:

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...

அன்புச் சகோதரருக்கு, இது குறித்து முன்பு சீனாவிலிருந்து கேள்வி அனுப்பிய ்mohideen s.fareed என்ற சகோதரருக்கு அளித்த விளக்கத்தைப் படித்துக் கொள்ளுங்கள். ஜுமுஆத் தொழுகைகளை அலட்சியப்படுத்தியவரின் நிலை என்ன?

உங்களைப் பொருத்த வரை தனி முஸ்லிமாக சீனாவில் ஒரு கிராமத்தில் வாழும் சகோதரரின் நிலை உங்களுக்கு இல்லை! ஜும்ஆப் பள்ளி நான்கு கீ.மீ தூரத்தில் இருக்கும் போது அங்கு சென்று வர (வாடகை மற்றும் சொந்தமாக) வாகன வசதி இருந்தால் நீங்கள் அப்பள்ளிக்குச் சென்று ஜும்ஆவில் கலந்துகொள்ள வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் அயல் நாடுகளுக்கு பணிக்குச் செல்பவர் சிலருக்கு இது போன்ற இடையூறுகள் ஏற்படுவதுண்டு. உலக வாழ்க்கையில் இடையூறு ஏற்படுகிறதென்றால் சகித்துக்கொள்ளலாம். இபாதத் - இறைவணக்க வழிபாடுகளில் இடையூறு செய்யப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் பணியில் சேரும்போது வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றே நிறுவனத்தடன் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். இப்போது நிறுவனத்தினரால் ஒப்பந்தம் மீறப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் இதை எதிர்க்க உங்களுக்கு உரிமையுண்டு.

வெள்ளிக்கிழமை மட்டும் உங்கள் பணியிடத்தில் வேறு ஒரு பிறமத சகோதரரை நியமிக்க முடியுமென்றால் அவ்வாறு செய்துகொள்ள நிறுவனத்துடன் பேசிப் பாருங்கள். தொடர்ந்து ஜும்ஆத் தொழுகையில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை எனில், இபாதத்துக்கு குறைவு ஏற்படுத்தாத வேறு வேலையை விரைவில் தேடிக்கொள்ளுங்கள்! இது உங்கள் நிலைமை அறிந்து நீங்களே முடிவு செய்யும் பிரச்சனை என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

satyamargam.com

0 comments:

Post a Comment