பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் தவிக்கிறேன்! மறுமையில் தண்டிக்கப்படுவேனா?

, , No Comments
கேள்வி: நான் ''அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'' என்று மனதலவில் ஏற்றுக் கொண்டேன். ஆனால் எனது பெற்றோர் உற்றார் உறவினர்கள் நான் இஸ்லாத்துக்கு மாறுவதை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். நான் என்னுடைய இஸ்லாமிய ஏற்பை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் மிகுந்த மன வேதனையில் தவிக்கிறேன். என்னுடைய கேள்வி நான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவிக்காததற்காக மறுமையில் தண்டிக்கப்படுவேனா?
இறைவன் அவனை நம்பிய அடியார்களை கைவிடுவதில்லை. இறை நம்பிக்கைக் கொண்டுள்ள நமக்கு சில பொழுதுகளில் சில காரியங்கள் நெருக்கடியாக தெரிந்தாலும் அதற்காக நாம் மனம் சஞ்சலப்பட்டாலும் இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைப்பெற்றிருந்தால் அதற்கும் இறைவன் புறத்திலிருந்து கூலி கிடைத்து விடும் என்பதை இஸ்லாம் தெளிவாகவே சொல்லியுள்ளது.

இன்றைக்கு உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள நிலையல்ல. இஸ்லாத்துடைய ஆரம்ப கால வரலாற்றை எடுத்து பார்த்தால் அன்றைய இறை நம்பிக்கையாளர்கள் கடின நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாத்தின் பகிரங்க எதிரியாக இருந்த உமர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை மக்காவில் மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றவர்களில் பெரும்பாலோர் உமர் போன்றவர்களுக்கு பயந்து தங்கள் இறை நம்பிக்கையை மறைத்தே வைத்திருந்தனர். இதற்கு இறைத்தூதர் அனுமதியும் அளித்தார்கள். உமர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தான் அங்கு அனைவரின் இறை நம்பிக்கையும் பகிரங்க அறிவிப்பாகின.

சில நெருக்கடிகளை சமாளிப்பதற்காக இறை நம்பிக்கையில் - இஸ்லாத்தில் - அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள நிலையில் அதை வெளிக் காட்டாமல் மறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கவே செய்கிறது. கீழுள்ள இறை வசனம் அதை தெளிவாக அறிவிக்கிறது பாருங்கள்.

எவர் (ஈமான்) இஸ்லாமிய நம்பிக்கைக் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் இறை நிராகரிப்பைக் கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு (அல் குர்ஆன் 16:106)

இஸ்லாமிய ''நான் இறை நம்பிக்கையாளன் தான்" என்று உள்ளத்தில் இஸ்லாம் இல்லாத நிலையில் யார் கிண்டலாக இறை நம்பிக்கையை எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை இந்த வசனம் முன் வைக்கும் அதே வேளை, இக்கட்டான சூழ்நிலைக்காக தனது இஸ்லாமிய நம்பிக்கையை தற்ாகலிகமாக மறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் பாவமான காரியமல்ல. என்பதையும் இறைவன் தெளிவுப்படுத்தியுள்ளான். இந்த வசனத்தில் இடம் பெறும் "எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை)" என்ற வாசகம் உங்கள் மன அமைதிக்குரியது.
ஆனாலும் இஸ்லாம் ஒரு வாசனை மலருக்கு ஒப்பானது. அது உங்கள் வழியாக தனது வாசனையை வெளிப்படுத்தித் தான் தீரும். இறைவன் உங்களுக்கு அருள் புரிந்துள்ளான். உங்கள் வழியாக எத்துனைப் பேருக்கு இந்த பெரும்பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பதை அவன் தான் அறிவான்.

மிகவும் அமைதியாக சூழ்நிலையை அணுகுங்கள். எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற அவசர பேர்வழிகளிடம் முதலில் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக சிந்திக்கக் கூடியவர்களிடம் வெளிபடுத்துங்கள். எந்த சந்தர்பத்திலும் நிதானம் இழந்து விடாதீர்கள்.

ஒருவேளை கடைசிவரை உங்கள் இஸ்லாமிய நம்பிக்கையை வெளிபடுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள் உங்கள் எண்ணத்திற்கும், முயற்சிக்கும் தகுந்த பலன் கிடைத்து விடும்.

இறைவனின் உவப்பிற்குரியவர்களே நேர்வழிப் பெறுவார்கள். அந்த வகையில் நீங்கள் பாக்கியம் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள். உங்களுக்காக நாங்களும் இறைவனைப் புகழ்கிறோம். அவனுக்கு நன்றி செலுத்துகிறோம். எப்போதும் அவனுடன் தொடர்புடன் இருங்கள்.

''Jazaakallaahu khairan'' www.tamilmuslim.com

0 comments:

Post a Comment