'மோசமான' நல்ல கணவனை என்ன செய்வது?

, , No Comments
கேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல் ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக அவருடைய நடத்தை மோசமாக இருக்கிறது.

பிற பெண்களுடன் 'சாட்" பண்ணுகிறார். செக்ஸ்மூவி பார்க்கிறார். கேட்டால் பொழுது போக்கு என்கிறார். என்னால் இதை அலட்சியப் படுத்த முடியவில்லை. நான் கண்டித்தாலோ, கத்தினாலோ அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு 'இனி செய்ய மாட்டேன்" என்கிறார். ஆனால் மீண்டும் செய்கிறார்.

அவரது நடவடிக்கையில் எனக்கு கடும் கோபம் வருகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தையும் என் வாழ்க்கையையும் நினைத்து நான் குழம்புகிறேன். நான் என்ன செய்வது..? எனக்காக துஆ செய்யுங்கள். (வாசகர் நலம் கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை)

பதில்: நாம் அளவு கடந்து நேசிக்கும் எது ஒன்றும் ஒரு சின்னஞ்சிறிய அளவு நம் விருப்பத்துக்கு மாற்றமாக நடந்தாலும் அது பெருமளவு நம்மை பாதித்து விடும். நீங்கள் உங்கள் கணவரை அளவு கடந்து நேசித்துள்ளீர்கள். இன்றும் நேசிக்கிறீர்கள். அதனால் தான் அவர் சின்னதாக கருதும் தவறு கூட உங்களை பெருமளவு பாதித்துள்ளது.

உங்கள் கணவர் அன்னியப் பெண்ணைப் பார்க்கும் போதோ - பேசும்போதோ உங்கள் மனதில் விதவிதமான குழப்பம் எழும்.

'நான் அழகாக இல்லையோ..

என் அழகு குறைந்துப் போய் விட்டதோ..

அவர் என்னை வெறுத்து விடுவாரோ..

என்னை பிடிக்காமல் போனதால் தான் மற்றப் பெண்களிடம் பேசுகிறாரோ.."

என்றெல்லாம் உங்கள் மனதில் ஏக சங்கடங்கள் தலை விரித்தாடும். தெளிவு கிடைக்க வழி தெரியாத இந்த குழப்பங்கள்தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பின்னாளில் வாழ்வில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தும் ஆயுதம். இதற்கெல்லாம் இடங்கொடுத்து விடாமல் இருப்பதுதான் இன்றைக்குறிய முதல் தேவை.

எதையும் நிதானமாக அணுகும் பக்குவம் நமக்கு கிடைத்து விட்டால் பாதி பிரச்சனைகள் தலைத் தூக்காமலே போய்விடும்.

என்னதான் புரிந்து நேசித்து மன உவப்புடன் கணவன் மனைவியாக இணைந்தாலும் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் வெவ்வேறானவை என்பது மட்டும் மாறிவிடப் போவதில்லை. தன் இயல்புக்கு தக்கவாறு கணவன் மனைவியையோ, மனiவி கணவனையோ மாற்றி விடுவது என்பது சாத்தியப்படாதவைகளாகும்.

அன்னியப் பெண்களை பார்ப்பது என்பது ஆண்களுக்கு விருப்பமானதாகும். ''என் சமூகத்தில் எனக்கு பின் ஆண்களுக்குறிய பெரும் சோதனை பெண்கள் தான்" என்பது நபி மொழி (புகாரி)

இந்த சோதனையிலிருந்து ஆண்கள் தவிர்ந்து நிற்பது அவரவர்களின் இறை நம்பிக்கையைப் பொருத்ததாகும். என்னதான் பாசமிகு மனைவி பக்கத்திலிருந்தாலும் பிற பெண்களால் ஆண் கவரப்படத்தான் செய்வான். ஆண்கள் விஷயத்தில் ஷைத்தானின் பலமே பெண்கள் தான்.

உங்கள் கணவருக்கு இறை நம்பிக்கையை அதிகப்படுத்த பாடுபடுங்கள். இறை நம்பிக்கையாளர்களிடம் ஷைத்தான் ஊடுருவும் போது அவர்களின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

''(நபியே!) ஷைத்தான் ஏதாவது (தவறான) எண்ணத்தை உம் மனதில் ஊசலாட செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால் அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும் யாவற்றையயும் அறிபவனாகவும் இருக்கிறான். (அல் குர்ஆன் 7:200)

''நிச்சயமாக எவர்கள் (இறைவனுக்கு) அஞ்சுகிறார்களோ அவர்களை ஷைத்தான் தீண்டி தவறான எண்ணத்தை ஊட்டினால் அவர்கள் (இறைவனை) நினைக்கிறார்கள். துரிதமாக விழிப்படைந்துக் கொள்கிறார்கள்.'' (அல் குர்ஆன் 7:201)

இந்த வசனங்களை பார்த்தால் உங்கள் கணவர் படிப்பினை பெரும் வாய்ப்புள்ளது. சுட்டிக் காட்டுங்கள். முக்கியமாக உங்களைப் போன்ற சகோதரிகளுக்கு நாம் சுட்டிக் காட்ட ஆசைப்படுவது என்னவென்றால் கணவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை அலட்சியப்படுத்துங்கள் என்பதேயாகும். அலட்சியப் படுத்துங்கள் என்பதன் பொருள் அலட்சியப்படுத்துவது போன்று நடிப்பதாகும். நடிப்பது என்பதன் பொருள் நேரம் வாய்க்கும் போது அவரது தவறை பக்குவமாக சுட்டிக் காட்டுவதற்குறிய பயிற்சியாகும்.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் தான் விரும்புவது போல் வாழ்க்கை அமைய வேண்டும் என்றே ஆசைப்படுவான். அனால் அப்படி அமைவது வெகு வெகு சொற்பமே.. இறைவன் நாடிய படிதான் வாழ்க்கை அமையும்.

நமது விருப்பத்திற்கு மாற்றமாக, நாம் விரும்பாத ஏதாவது நடக்கும் போது 'இது இறைவன் புறத்திலிருந்து வந்துள்ள சோதனையாகும்" என்று அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பல வழிகளில் நாம் மனிதனை சோதிப்போம் என்று இறைவன் கூறுகிறான் (பார்க்க அல் குர்ஆன் 2:155) சோதனைகள் வித்தியாசப்படலாம். ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்படாத மனிதர் எவருமில்லை.

இதுபோன்ற காரியங்களுக்காக கணவணுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால் அவர் தான் செய்யும் தவறில் மேலும் முன்னேற வழிவகுத்து விடும். அதனால் அத்தகைய காரியங்களில் ஈடுபட மாட்டீர்கள் என்று நம்புகிறோம். கணவருக்காக இறைவனிடம் முறையிடுங்கள்.
''Jazaakallaahu khairan'' www.tamilmuslim.com

0 comments:

Post a Comment