நபி வழியை பின்பற்றுவதின் அவசியம் முஜீபுர்ரஹ்மான் உமரி

, , No Comments
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் நபிகள் நாயகம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதும் உண்டாகட்டுமாக!

சிறந்த சமுதாயம் என்று இறைவனால் பாராட்டப்பட்ட முஸ்லிம் சமுதாயம் அந்தத் தகுதியை இழந்து நிற்பதை இன்று நாம் காண்கிறோம். நேர்மை, நாணயம், நல்லொழுக்கம், வீரம், தியாகம், ஒற்றுமை, பிறர் நலம் பேணல் மற்றும் அனைத்து நற்பண்புகளுக்கும் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் முன்மாதிரிகளாகத் திகழ்ந்தனர். இன்றோ அனைத்து நற்பண்புகளையும் இழந்து நிற்கின்றனர்.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? திருமறைக் குர்ஆனையும் நபி அவர்களின் வழி காட்டுதலையும் புறக்கணித்துவிட்டு வேறு வழிகளைத் தேடிக் கொண்டனர் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. மக்கள் திருக்குர்ஆனின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்ப வேண்டும். நபி அவர்களின் வழிகாட்டுதலின்பால் கவனம் செலுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல நூறு ஆண்டுகளாகத் தமிழாக்கம் செய்யப்படாதிருந்த திருக்குர்ஆன் இந்த நூற்றாண்டில் தமிழாக்கம் செய்யப்பட்டு மக்களைச் சென்றடைந்து வருகின்றது. பொருளுணர்ந்து குர்ஆனைப் படிப்போர் பெருகி வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

திருக்குர்ஆனின் தமிழாக்கம் மனிதன் நேர்வழியில் நடக்கத் துணைபுரியும் என்றாலும் முழுமையாக நேர்வழியில் பிசகின்றி நடைபோட நபி அவர்களின் வாழ்க்கையை அறிந்து பின்பற்றுவது மிகமிக அவசியம். இதைத் திருக்குர்ஆனே பல இடங்களில் வலியுறுத்துகின்றது.

"மக்களுக்கு அருளப்பட்டதை (நபியே) நீர் விளக்கிட வேண்டுமென்பதற்காகவும் அவர்கள் சிந்திக்க வேண்டுமென்பதற்காகவும் உமக்கு இப்போதனையை நாம் அருளினோம்". (அல்குர்அன் 16:44)

"மக்கள் எதில் கருத்து வேறுபட்டுள்ளனரோ அவற்றை நீர் தெளிவுபடுத்த வேண்டு மென்பதற்காகவும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அருளாகவும் தான் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்". (அல்குர்ஆன் 16:64)

திருக்குர்ஆனைப் பூரணமாகப் புரிந்து கொள்ள நபி அவர்களின் விளக்கவுரை அவசியம் என்பதை இவ்விரு வசனங்களும் வலியுறுத்துகின்றன. நபி அவர்களைப் பின்பற்றுவது எந்த அளவு அவசியம் என்பதை மேலும் சில வசனங்கள் விளக்குகின்றன.

":உமது இறைவன் மேல் ஆணையாக! தங்களிடையே பிணக்கு ஏற்படும்போது உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் அளித்த தீர்ப்பில் எந்தக் குறையும் காணாமல் முழுமையாகக் கட்டுப்பட்டால் தவிர அவர்கள் மூஃமின்களாக மாட்டார்கள்". (4:65)

"இத்தூதர் தங்களிடம் எதைக்கொண்டு வந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களை விலக்குகிறாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்". (59:7)

"அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் (3:132)

"யார் இத்தூதருக்குக் கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு கட்டுப் படுகிறார்". (4:180)

"நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்: மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கிறான். (அப்போது) அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் என்று (நபியே) நீர் கூறுவிராக!" (அல்குர்ஆன் 3:31)

"இவரது (இத்தூதரின்) கட்டளைக்கு மாறு செய்வோர் தங்களுக்குச் சோதனை ஏற்படுவதையோ அல்லது கடுமையான வேதனை அவர்களுக்கு ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளட்டும்" (அல்குர்ஆன் 24:63)

அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! என்று (நபியே) கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் அத்தகைய காபிர்களை அல்லாஹ் விரும்பமாட்டான் (அல்குர்ஆன் 3:32)

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் சுய விருப்பம் கொள்ளமூஃமினான ஆணுக்கோ,மூஃமினான பெண்ணுக்கோ உரிமையில்லை. யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் பகிரங்கமாக வழி கெட்டுவிட்டார். (அல்குர்ஆன் 33:36)

அல்லாஹ்வையும் இத்தூதரையும் நாங்கள் நம்பினோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அதன் பின்னர் அவர்களில் ஒரு சாரார் புறக்கணிக்கின்றனர். அவர்கள்மூஃமின்களல்லர். (24:47)

அல்லாஹ்வின் பக்கமும் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவனது தூதரின்பாலும் அழைக்கப்படும்போது நாங்கள் செவியுற்றோம், கட்டுப்பட்டோம் என்பதுதான் மூஃமின்களின் பதிலாக இருக்க வேண்டும். மேலும் அவர்களே வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 24:51)

இந்த கருத்தில் இன்னும் நாம் ஏராளமான வசனங்களை திருக்குர்ஆனில் காணலாம். இவை யாவும் நபி அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும் அதில் தான் வெற்றியிருக்கின்றது; அவ்வாறு பின்பற்றுவோர் தான் மூஃமின்கள் பின்பற்ற மறுப்போர் வழிகேடர்கள் என்பதை ஜயத்திற்கிடமின்றிக் கூறுகின்றன. அல்லாஹ் நம் அனைவரையும் நபிவழியைப் பின்பற்றுவதின் அவசியத்தை உணரச்செய்வானாக ஆமின்.

0 comments:

Post a Comment