இரவுத் தொழுகையின் ரக்அத்கள்

, , No Comments
நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய முதல் ஹதீஸின்படி தராவீஹ் அல்லது தஹஜ்ஜுத் தொழுகையின் ரக்அத்துகள் எட்டு மற்றும் வித்ரு மூன்று ரக்அத்கள் என்பது தெளிவாகிறது.

வேறு சில ஹதீஸ்களில் இதைவிட அதிக எண்ணிக்கையும் மற்றும் சில ஹதீஸ்களில் இதைவிடக் குறைந்த எண்ணிக்கையும் கூறப்படுகின்றது. அந்த ஹதீஸ்களிலேயே அதற்கான விளக்கமும் கிடைக்கின்றது.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் 20 ரக்அத்துகள் தொழுதார்கள் என்பதற்கோ மற்றவர்களை 20 ரகத்துகள் தொழ ஏவினார்கள் என்பதற்கோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லவே இல்லை.

வித்ரு ஒரு ரக்அத் தொழும்போது எட்டு ரக்அத்துகளைப் பத்து ரக்அத்களாகவும் நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்கள் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பஜ்ரு உடைய சுன்னத் இரு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்களாகும்

என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையை ஒன்பது ரக்அத்கள் தொழுதால் அத்துடன் போதுமாக்கிக் கொள்வார்கள். தனியாக எட்டு ரக்அத்கள் தொழுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அப்போது எட்டு ரக்அத்கள் தவிர அதற்கு முந்தைய ரக்அத்தில் உட்கார மாட்டார்கள்.

அதன்பின் ஒன்பதாம் ரக்அத்தில் ஸலாம் கொடுத்துவிட்டு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதினொன்று ரக்அத்துக்களாகும். நபி(ஸல்) அவர்கள் வயோதிகம் அடைந்தபிறகு ஏழு ரக்அத்துகள் தொழுதுவிட்டு பிறகு உட்கார்ந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். ஆக மொத்தம் ஒன்பது ரக்அத்துகள்


என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இன்னொரு ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது. வேறொரு விதமாகவும் அவர்கள் இதே எண்ணிக்கையை தொழுதுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் எட்டு ரக்அத்துகள் தொழுவார்கள். பின்னர் ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். முதுமை அடைந்தபோது ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பின்னர் உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்

என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.

மிக அதிகமாக அவர்கள் பன்னிரண்டு ரக்அத்களும் தொழுதிருக்கிறார்கள். அதன் பிறகு வித்ரு தொழுதிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் வித்ரு தொழுவார்கள் (சுருக்கித்தரப்பட்டுள்ளது)

என்று இப்னுஅப்பாஸ் (ரலி) அறிவிக்கக்கூடிய ஹதீஸ் நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது. மற்றோர் அறிவிப்பில் மொத்தம் பதின்மூன்று ரக்அத்கள் (ஃபஜ்ர் சுன்னத் நீங்கலாக) தொழுததாக உள்ளது. இதன் மூலம் பனிரெண்டு ரக்அத்கள் இரவுத் தொழுகை தொழும்போது வித்ரு ஒரு ரக்அத் தொழுதிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

பனிரெண்டு ரக்அத்களை அவர்கள் தொழுத விபரம் விரிவாகவும் இன்னொரு ஹதீஸில் கூறப்படுகிறது.

முதலில் இரண்டு ரக்அத்களை சிறிய அளவில் தொழுவார்கள். பின்னர் நீண்ட, மிக நீண்ட அளவில் இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அதை விடவும் சிறியதாக இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்பு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள்

என்று ஸைத் இப்னு காலித் அல் ஜுஹனீ(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.

வித்ரையும் சேர்த்து நபி(ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை. குறைந்த பட்சம் வித்ரையும் சேர்த்து ஒன்பது ரக்அத்களுக்கும் குறைவாக இரவில் தொழுததில்லை. இந்த எண்ணிக்கையை விடக் குறைப்பதும், இதைவிடக் கூட்டுவதும் நபி வழிக்கு மாற்றமானதாகும்.

20 ரக்அத்களும், வித்ரு மூன்று ரக்அத்களும் என்று வாதிடுவோர்களுக்கு நபி வழியில் ஒரு ஆதாரமும் இல்லாத போது, உமர்(ரலி) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் 20+3 ரக் அத்கள் தொழுததாக, அல்லது தொழ வைத்ததாக - தொழும்படி ஏவியதாக கதை புனைந்துள்ளனர். உமர்(ரலி) அவர்கள் இருபது ரக்அத்கள் தொழுதார்கள் என்பதற்கோ, தொழ வைத்தார்கள் என்பதற்கோ ஒரு ஆதாரமும் இல்லை.

உபை இப்னு கஃபு(ரலி), தமீமுத்தாரி (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களையும் பதினோரு ரக்அத் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் உத்தரவிட்டதாகத்தான் சான்று உள்ளது. (முஅத்தா) இப்படி உமர்(ரலி) அவர்கள் 11 ரக்அத்கள் தொழ வைக்கக் கட்டளையிட்ட செய்தி தெளிவாக இருக்கும் போது, நபி வழிக்கும் இதுவே பொருத்தமாக அமைந்திருக்கும் போது இதை ஏற்பதே அறிவுடைமையாகும்.

உமர்(ரலி) காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுதார்கள் என்ற கருத்தில் வருகின்ற செய்திகள் யாவும் குறைபாடுடைய செய்திகளாகும். ஆதாரப்பூர்வமான செய்தி என்பதை ஏற்றுக் கொண்டால் கூட அவர்களின் தெளிவான கட்டளை 11 ரக்அத்கள் என்பதைப் பறை சாற்றும் போது அவர்களின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படுவதை எப்படி ஏற்க இயலும்? அவர்களின் மேற்கண்ட கட்டளை இல்லாவிட்டால் வேண்டுமானால் அவர்களின் காலத்தில் நடந்ததை அவர்கள் நடத்தியதாக நம்ப இடமிருக்கும். அவர்களின் கட்டளை, அவர்களின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படுவதற்கு மாற்றமாக இருக்கும்போது எப்படி உமர்(ரலி) அவர்களுடன் இதை சம்பந்தப் படுத்த முடியும்?

தொடரும், இன்ஷா அல்லாஹ்

0 comments:

Post a Comment