மெனோபாஸ்

, , No Comments
நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது வரை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுபோவதைத்தான் மெனோபாஸ் என்கிறோம். பூப்பெய்தல், பிரசவம் போல ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. ஹார்மோன் மாற்றங்களால் அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். நாற்பத்தைந்து வயதில் மெனோபாஸிற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மனவலிமை மட்டுமே.

மெனோபாஸின் அறிகுறிகள்:
ஒவ்வொரு மாதமும் சரியாகத் தொடர்ந்து கொண்டிருந்த மாதவிடாய் சுழற்சியில் ஏற்படக்கூடிய மாறுதல்கள்தான் மெனோபாஸ் ஆரம்பமாகியிருக்கிறது என்பதன் முதல் அறிகுறி. மாதவிடாயின்போது அதீத உதிரப்போக்கு, மாதவிடாய் திடீரென்று நின்று போதல், அப்நார்மல் பிளீடிங், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பிளீடிங், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மேல் பிளீடிங் இவை மாதவிடாயில் ஏற்படும் மாற்றங்கள்.

உடல் முழுவதும் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒருவித சூடு ஒரு நிமிடம் ஃபிளாஷ் மாதிரி பரவிவிட்டுப் போகும். இதற்கு hot flushes என்று பெயர். பெரும்பாலான பெண்களுக்குத் திடீரென ஏற்படும் hot flushes பப்ளிக்கில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

பிறப்பு உறுப்பும் அதைச் சுற்றியுள்ள இழைகள் மெலிதாகவும், உலரவும் தொடங்கிவிடும்.

ஹார்மோன் மாற்றங்களால் மெனோபாஸில் இருக்கும் பெண்கள், ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மூட் ஒரு நாளிலேயே பலமுறை மாறிக்கொண்டே இருக்கும். அடிக்கடி கோபப்படுவது, எரிச்சல்படுவது, சோர்வு, மன உளைச்சல், டிப்ரஷன் போன்றவை மெனோபாஸ் பெண்களுக்கு ஏற்படக்கூடியவை. உடல் அளவில் ஏற்படக்கூடிய சில மாற்றங்களும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

செக்ஸில் ஆர்வம் குறையும். உடலில் எனர்ஜி குறைவதால் பொதுவாக எதிலேயும் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு வலிமிக்க உடலுறவாக அமையும்.

எலும்புகள் மெலியத் தொடங்கிவிடும், இதனால் நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள் எளிதில் ஆன்டியோ பொரோஸிஸ் நோயினால் தாக்கப்படுவார்கள். எலும்புகள் வீக்காகத் தொடங்கும். இந்த அறிகுறிகள் குண்டாக இருக்கும் பெண்களுக்கு இன்னும் அதிகமாகத் தெரியும்.

இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறிகள் இருதய நோய் பரம்பரை உள்ளவர்களுக்குத் தெரியத் தொடங்கும். சரி. இந்த மாற்றங்களுக்குக் காரணம்?

ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் செய்யும் முக்கிய வேலைகளைப் பார்க்கலாம். பெண்களின் உடலில் அவர்களுடைய மார்பகங்கள், பெல்விக் எலும்பு வளர்ச்சி, பிறப்பு உறுப்பு, கர்ப்பப்பை செயல்பாடுகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். கால்ஷியத்தை உறியச் செய்து எலும்புகளை பலப்படுத்துவதும் இந்த ஹார்மோன்தான். மேலும் நல்ல கொலஸ்ட்ராலான HDL_ஐ. அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலான LDL_ஐ.. குறைத்து பெண்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கவும் செய்கிறது. அதனால் மெனோபாஸ் வரை பெண்களுக்கு இருதய நோய் தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

மெனோபாஸின்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும். இதன் விளைவாக டிப்ரஷன், எலும்பு மெலிதல், இருதயநோய் ஆகியவை பெண்களை எளிதில் தாக்கக் கூடிய நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.

மெனோபாஸ் அறிகுறிகள் அனைத்தும் ஈஸ்ட்ரோஜன் குறையும்போது அறியப்படுகிறது. ஹார்மோன் ரீப்பிளேஸ்மெண்ட் தெரபி (HRT) என்ற சிகிச்சையின் மூலமே ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை ஈடுகட்ட முடியும். ஆனால், இந்த சிகிச்சைக்கு பக்கவிளைவுகள் உண்டு. இதைப்பற்றி சிகிச்சைக்கு முன்பு மகப்பேறு மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.

மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கும் லேடீஸ் கவனித்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்…

* ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லவேண்டிய ஸ்டேஜ் என்பதால், இதன் அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும்.

* 45 வயதைக் கடந்த பெண்கள் டி.என்.சி செய்து கொள்வது நல்லது. அந்த உதிரப் போக்கின் மற்றும் பல காரணங்களைத் தெரிந்து கொள்ள இது உதவும். இதன் மூலம் பிளீடிங்கும் ஓரளவுக்குக் குறையலாம்.

* மருத்துவரை அணுகி வைட்டமின் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். Omega 3 fathyalids உள்ள மீன் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* ஸ்ட்ரெஸ்ஸை முற்றிலுமாகத் தவிருங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல் நலன் கருதி எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது! குறிப்பாக குடும்பப் பிரச்னைகள்.

* குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையாக நடந்து கொண்டு உதவி பண்ணணும். வீட்டு வேலைகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கலாம். உடலை அதிகம் வருத்திக் கொள்ளக் கூடாது.

* உணவினை எரிக்கும் சக்தியான Basal Metabolic Rate சற்றே குறைந்து விடுவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். காலை வேளையில் சின்ன மீல்ஸாகவும் இரவு நேரங்களில் டிஃபன் ஐயிட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.

* ஞாபகத் தன்மை குறையத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஐந்துமுறை பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறப்பு உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் உலர்ந்த தன்மையைச் சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம்களை மட்டும் பயன்படுத்தலாம்.

* உடல் மற்றும் முகச் சருமம் உலர்ந்துவிடுவதால் மாய்சுரைஸர், கிளென்ஸர், டோனர் அப்பை செய்து கொள்ளலாம்.

* எலும்புகளுக்கு வலுவூட்ட ஏரோபிக் உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

* மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு வருடம் மாதவிடாய் சுழற்சி நின்றால் மட்டுமே மெனோபாஸ், மூன்று அல்லது ஆறு மாதங்கள் பீரியட்ஸ் நின்றால், மெனோபாஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் முடிந்த வரை முழுமையான மெடிக்கல் செக் _ அப் எடுத்துக் கொள்வது நல்லது!

0 comments:

Post a Comment