நம் பணத்தின் கதை! – வரலாறு!

, , No Comments

நீண்ட நெடிய இந்திய வரலாறில் பல நூறு ஆண்டுகளாகவே நாணயங்கள் புழங்கி வந்திருக்கின்றன.

என்றாலும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகே நாணயங்களின் அதிகாரப்பூர்வ மான வரலாறு தொடங்குகிறது.

இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பு ஹைதராபாத் நிஜாம், நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வந்தார். 1790-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் அப்போதைய தலைநகரான கொல்கத்தாவில் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியது. இதற்காக இங்கிலாந்தில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. என்றாலும், நாணயத் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்ததால், 1815-ல் மும்பை மாகாண பிரிட்டிஷ் ஆளுநர் ஒருவர் மும்பையில் நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றைத் தொடங்கினார். 1984-ல் டெல்லி அருகே நொய்டாவில் புதிய நாணய ஆலை ஒன்றும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஆலைகள் மூலம் ஓர் ஆண்டுக்கு சுமார் அறுபது லட்சம் நாணயங்கள் உற்பத்தியாகிறது.



நமது நாணயத்தின் கதை இப்படி என்றால் பணத்தின் வரலாறு வேறு மாதிரி. ஆரம்ப காலத்தில் ரூபாய் நோட்டை (1770 – 1832 காலகட்டத்தில்) பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தான் வெளியிட்டது. பிறகு இங்கிலாந்திலிருந்து பணத்தை அச்சிட்டு இங்கே கொண்டு வந்து கொடுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 10, 20, 50, 100, 1,000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் விக்டோரியா மகாராணியின் பெயரில் வெளியிடப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியாக வெட்டப்பட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும். அதைக் கொண்டு போய் கொடுத்தால், மீதிப் பணத்தை கொடுக்கும் விநோதமான வழக்கம் அப்போது இருந்தது.

1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. ஆனால் சில காரணங்களால் 1926-ல் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. 1935-ல் கரன்சி பொறுப்பு அனைத்தும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டு கரன்சியை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் கரன்சி வெளியிடப்பட்டது.


வட இந்தியாவில் நமக்கு எந்த ஊரை பற்றி தெரியுமோ இல்லையோ, நாசிக் பற்றி நிச்சயம் தெரியும்.





காரணம், இங்குதான் நமது ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இங்கிலாந்திலிருந்து கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அவை கப்பல் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டன. இது நேரம் பிடிக்கும் விஷயமாக இருந்ததால், 1925-ல் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு பிரின்டிங் பிரஸை அமைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். முதலில் இங்கே தபால்தலைகள் மட்டுமே அச்சடிக் கப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் வேலை தொடங்கியது. இன்று வரை இங்கு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.

ஆனால் இந்தியப் பொருளாதாரம் வளர வளர, பணத்தின் தேவை அதிகரித்ததாலும் வங்கிகளின் எண்ணிக்கை பெருகியதாலும் மேலும் சில இடங்களில் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் பிரின்டிங் பிரஸ்களைத் தொடங்கியது நமது மத்திய அரசாங்கம். 1974-ல் மத்தியப் பிரதேசம் தேவாஸில் ஒரு அச்சகம் தொடங்கப்பட்டது.இந்த இரண்டு ஆலைகளும் எஸ்.பி.எம்.சி.ஐ.எல். [Security Printing and Minting Corporation of India Limited] நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.

இவை தவிர, ஆர்.பி.ஐ. தனியாக பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (Bharatiya Reserve Bank Note Mudran Private Limited) என்கிற பொது நிறுவனத்தை 90-களில் தொடங்கியது. இந்த நிறுவனம் மைசூரிலும் மேற்கு வங்காளம் சல்பானியிலும் கரன்சி மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங் களை அச்சடித்து வருகிறது.

இங்க் பேப்பர் சேஃப்டி

கரன்சி தயாரிக்கும் பிரின்டிங் பிரஸுக்குத் தேவையான பேப்பர்கள், இங்க் போன்றவை தயார் செய்ய மத்தியப்பிரதேசத்தில் இரண்டு ஆலைகளை நடத்தி வருகிறது மத்திய அரசு. ஹோசங்காபாத்தில் பேப்பர் மில், தேவாஸில் சென்சிட்டிவ்வான இங்க் தயாரிக்கும் ஆலை நடத்தப்பட்டு வருகிறது. கரன்சிகளின் ரகசியங்கள் கருதியே இப்படி ஒரு ஏற்பாடு.

கரன்சி ஆர்டர்

கரன்சிகளை எவ்வளவு அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படி பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் ஆர்.பி.ஐ.தான் இந்த நிறுவனங்களுக்குச் சொல்கிறது. இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் ஆர்டர்கள் இந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன. சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் பிரின்டிங் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

பத்தாயிரம் ரூபாய் நோட்டு வரை அச்சடிக்க ஆர்.பி.ஐ.க்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே அச்சடிக்கிறது.

கரன்சி விநியோகம்

ஆர்.பி.ஐ. கொச்சி உட்பட பத்தொன்பது இடங்களில் தனது கரன்சி கருவூலங்களை [chest] வைத்துள்ளது. இங்கிருந்துதான் கரன்சி நோட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர, எஸ்.பி.ஐ. உள்பட தேசியமயமாக் கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் 4,200 கிளைக் கருவூலங்கள் வழியாகவும் கரன்சி நோட்டுகள் விநியோகம் செய்யப் படுகின்றன. போலியில்லாத ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பு ஆர்.பி.ஐ.யையே சாரும்.

0 comments:

Post a Comment