தஜ்ஜாலின் வருகை

, , No Comments
'நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ உபைதா (ரலி) நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்.

'ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) நூல் - முஸ்லிம்.

'தஜ்ஜால்' எனும் கொடியவனின் வருகையும் நாளை மறுமை நாள் வருவதற்கு முன் அடையாளமாகும். இந்த தஜ்ஜாலின் வருகை, பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால்தான், இவனது வருகையை பெரிய விஷயமாக நபி (ஸல்) அவர்கள் கருதுகிறார்கள்.

தவறான அறிமுகம்.

தஜ்ஜால் பற்றி ஹதீஸ்களில் கூறப்படும் சில செய்திகள், நம் மனித அறிவுக்கு ஏற்றதாக இல்லை எனக் கருதும் சிலர், 'தஜ்ஜால்' என்பதற்கு 'தீயசக்தி' என்ற அளவில் மட்டுமே பெர் சூட்டுகின்றனர். பிரிட்டிஷார் கையில் உலகத்தின் பாதி இருந்தபோது, பிரிட்டனை சில மவ்லவிகள் 'தஜ்ஜால்' என்று வர்ணித்தனர். இன்னும் சிலரோ அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சில நாட்டுத் தலைவர்களையும் கூட 'தஜ்ஜால்' என்று வர்ணித்தனர்.

இஸ்லாமிய மார்க்கத்தின் தொடர்புகளைக் குறைத்துக் கொண்டிருக்கிற சிலர் தங்களின் கற்பனைக் குதிரையில் உதித்த கதைகளை தஜ்ஜாலின் பெயரால் புனைந்து பரப்பி விட்டனர். 'தஜ்ஜாலின் தலை வானத்துக்கும், கால் தரைக்குமாய் இருக்கும் அளவுக்கு வளர்ந்து இருப்பான். கடலின் நீர் அவனது கரண்டைக் காலுக்கும் கீழேதான் இருக்கும். கடலின் மீனைப் பிடித்து, சூரியனில் காட்டிச் சுட்டுத்தின்பான். பனை மரத்தை வேரோடுப் படுங்கி பல் தேய்ப்பான்' என்று அவர்களின் கற்பனைகள் கூறுகின்றன. இவை எதுவும் உண்மை அல்ல!.

சரியான அறிமுகம்

'நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும், அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன், ஆனால் தஜ்ஜாலின் வலது கண் திராட்சை போன்று சுருங்கி இருக்கும்' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இன்னு மஸ்ஊத் (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

'இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட எந்த ஒரு இறைத்தூதரும் தம் சமுதாயத்தவரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணனை எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அவன் ஒற்றைக் கண்ணன் அல்ல, அவனது இரு கண்களுக்குமிடையே 'இறை மறுப்பாளன்' என எழுதப்பட்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் - புகாரீ 7131.

ஊனமடைந்த கண், மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமாக சதைக் கட்டி ஒன்று தொன்படும் என்றும் நபி (ஸல்) கூறி உள்ளனர் : நூல்கள் - முஸ்லிம், அஹ்மத்.

'ஊனமடையாத கண், பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போல் அமைந்திருக்கம்' ( அஹ்மத்).

'அவன் வெள்ளை நிறத்தவனாக இருப்பான், அவனின் உடலமைப்பு கவர்ச்சியாக அமைந்திருக்கும்' (அஹ்மத்).

'சற்று குண்டான உடலுடையவனாக இருப்பான்' (முஸ்லிம்).

'பின்புறத்திலிருந்து பார்த்தால் அவனின் தலைமுடி அலை அலையாய் இருப்பதாகத் தெரியும் (அஹ்மத்).

'பரந்த நெற்றியுடையவனாக இருப்பான்' (பஸ்ஸார்)

'குள்ளமாகவும் கால்கள் இடைவெளி அதிகம் உள்ளவனாகவும் இருப்பான்' (அபூதாவூத்).

தஜ்ஜால் பற்றிய சரியான அறிமுகம் இது. இது அல்லாத எந்த அறிமுகமும் சிலரால் கற்பனை செய்யப்பட்டதே என்பதை கருத்தில் கொள்க! 'அவனின் ஒரு கண் ஊனம், மறுகண் பச்சை நிறக்கல் போல் இருக்கும்' என்பதுதான் அவனது தோற்றத்தில் வித்தியாசமானவை ஆகும்.

தஜ்ஜால் எங்கு உள்ளான்

தஜ்ஜால் இனிமேல் பிறப்பவன் அல்ல. ஏற்கனவே பிறந்தவன் ஆவான். அவன் தற்போதும் இருந்து வருகிறான். இவனை, கிருத்துவராக இருந்து பின்பு இஸ்லாத்தில் இணைந்த தமீமத்தார் (ரலி) அவர்கள் நேரில் ஏதேச்சையாக கண்டுள்ளார்கள். அவனை தான் கண்ட விபரத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் செய்துள்ளனர். தஜ்ஜால் பற்றிய இதர விபரம் அந்த ஹதீஸ் மூலம் நமக்குப் புரிகிறது.

நபி (ஸல்) அவர்களின் (தொழுகைக்கான) அழைப்பாளர் 'அஸ்ஸலாத்து ஜாமிஆ' (தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது) என்ற அறிவித்தார். இதைக் கேட்ட நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே மிம்பரில் அமர்ந்தார்கள். 'அனைவரும் தொழுத இடத்திலேயே அமருங்கள்' என்று கூறிவிட்டு 'நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள், 'அல்லாஹ்வும் அவனின் தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களை அச்சுறுத்தவோ ஆர்வமூட்டவோ உங்களை நான் ஒன்று கூட்டவில்லi. தமீமுத்தாரி முன்பு கிருத்தவராக இருந்தார். அவர் வந்து இஸ்லாத்தில் இணைந்து விட்டார். தஜ்ஜால் பற்றி உங்களுக்குச் கூற வந்ததுக்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். (அவர் என்னிடம் கூறியதை நீங்களும் கேளுங்கள்).

லக்ம், ஜுகாம் ஆகிய சமூகத்தில் முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன் (புயல் காரணமாக) ஒரு மாதகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் சமயம் ஒரு தீவில் ஒதுங்கினோம். கப்பலில் வைத்திருந்த சிறு தோணிகள் மூலம் அந்த தீவில் நுழைந்தோம். அப்போது உடல் முழுவதும் மயிர்கள் நிறைந்த ஒரு பிராணி எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் காரணமாக அதன் மலஜலம் பாதைகளை (உறுப்புக்களைக்) கூட அவர்களால் அறிய இயலவில்லை.

அந்தப் பிராணியிடம் அவர்கள், 'உனக்கு ஏற்பட்ட கேடே நீ என்ன பிராணி?' என்று கேட்டனர். 'ஜஸ்ஸாஸா' என்று அது கூறிவிட்டு, 'நீங்கள் இதோ இந்த மடத்தில் உள்ள மனிதனிடம் செல்லுங்கள், அவர் உங்களைக் காண்பதில் ஆர்வம் காட்டுவார்' என்றும் அப்பிராணி கூறியது. அந்த மனிதனின் பெயரையும் கூறியது. அந்தப் பிராணி ஒரு பெண் ஷைத்தானாக இருக்குமோ என்று பயந்தோம்.

நாங்கள் அந்த மடத்தை நோக்கி விரைந்தோம். அங்கு சென்றதும் ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை இதுவைர நாங்கள் பார்த்ததே இல்லை. இரண்டு கரண்டை கால்களுக்கும் முட்டுக்கால்களுக்கும் இடையே தலையைச் சேர்த்து கழுத்தில் இரும்பால் கட்டப்பட்டிருந்தான், 'உனக்கு ஏற்பட்ட கேடே! ஏனிந்த நிலை' என்று கேட்டோம்.

அதற்கு அந்த மனிதன் '(எப்படியோ) என்னைப் பற்றி அறிந்து விட்டீர்களே! நீங்கள் யார்? எனக் கூறுங்கள்' என்றான். 'நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் நாங்கள் பயணம் செய்தபோது, ஒரு மாதம் கடல் அலையால் அலைகழிக்கப்பட்டோம். இப்போது தான் இந்த தீவிற்கு வந்தோம். அடர்ந்த மயிர்கள் நிறைந்த ஒரு பிராணியைக் கண்டோம். அது, நான் ஜஸ்ஸாஸா, இந்த மடத்தில் உள்ள மனிதரைப் பாருங்கள்' என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம்' என்று கூறினோம்.

'பைஸான் என்ற இடத்தில் உள்ள பேரீத்தம் மரங்கள் பயனளக்கிறதா? என்று கூறுங்கள்' என அந்த மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்று கூறினோம். அதற்கு அம்மனிதன் 'விரைவில் அங்குள்ள மரங்கள் பயனளிக்காமல் போகலாம்' என்றான். 'சூகர் எனும் நீருற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரை விவசாயத்திற்கு பயன் படுத்துகிறார்களா? என்று கேட்டான். அதற்கு நாங்கள் ' ஆம், தண்ணீர் அதிகமாகவே உள்ளது. அங்குள்ளோர் அத்தண்ணீர் மூலம் விவசாயம் செய்கின்றனர்' என்று கூறினோம்.

'உம்மி சமுதாயத்தில் தோன்றக்கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக்கூறுங்கள்' என அம்மனிதன் கேட்டான். 'அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு, தற்போது மதீனாவில் உள்ளார்' என்று கூறினோம். 'அரபியர்கள் அவருடன் போர் புரிந்தார்களா?' என்று அம்மனிதன் கேட்டான். ஆம் என்றோம். 'போரின் முடிவு எப்படி இருந்தது?' என்று கேட்டான். 'அவர் தன் அருகில் வசித்த அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்' என்று கூறினோம். 'அவருக்கு அவர்கள் கட்டுப்படுவதே சிறந்தது' என்று அவன் கூறினான்.

நான் இப்போது என்னைப் பற்றிக் கூறுகிறேன். நான்தான் தஜ்ஜால். நான் (இங்கிருந்து) வெளிறே வெகு சீக்கிரம் எனக்கு அனுமதி தரப்படலாம். அப்பேது நான் வெளியே வருவேன். பூமி முழுதும் பயணம் செய்வேன். நாற்பது நாட்களில் எந்த ஊரையும் நான் அடையாமல் விட மாட்டேன். மக்கா, மதீனா இரு ஊர்களைத் தவிர. அந்த இரு ஊர்களும் எனக்கு தடுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயற்சிக்கும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு வானவர் என்னை எதிர் கொண்டு தடுப்பார். அதன் வழிகள் அனைத்திலும் அதைக் காண்கானிக்கின்ற வானவர்கள் இருப்பர்' என்று அம்மனிதன் கூறினான்.

இவ்வாறு தமீமுத்தாரீ (ரலி) தன்னிடம் கூறியதாகக் கூறிய நபி (ஸல்) அவர்கள் தம் கைத்தடியை மிம்பரில் தட்டிவிட்டு, 'இது (மதீனா) தூய்மையான நகரம், தூய்மையான நகரம்' என்று கூறினார்கள். 'இதே செய்தியை நான் உங்களிடம் கூறி இருக்கிறேன் தானே' என்று மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதும், மக்கள் 'ஆம்' என்று பதில் கூறினர்.

அறிந்து கொள்க! நிச்சயம் அவன் சிரியா நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். இல்லை, இல்லை! அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பாளர் : பாத்திமா பின்த் கைஸ் (ரலி) நூல் - முஸ்லிம்.

தஜ்ஜால் என்பவனை பார்த்தோரில் முக்கியமானவர், தமீமத்தாரி (ரலி) அவர்கள் ஆவார். அவர்களும் கூட கடல் பயணத்தின் போது, புயலால் திசை மாறி, ஒரு தீவுக்கு ஒதுங்கியதால் அது எந்தப் பகுதி என்பதை சரிவர புரிந்து கொள்ள இயலாததால் குறிப்பிட்ட இடம் பற்றி அவர்களால் கூற இயலவில்லை. இதனால் தான் நபி (ஸல்) அவர்களும் கூட தமீமுத்தரி (ரலி) அவர்களின் தகவல் அடிப்படையில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்று அறிவிக்கிறார்கள். அவன் இருக்கும் இடம் இதுதான் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், ஒரு கடல்கரைத் தீவில் அவன் இருக்கிறான் என்பது மட்டும் உறுதியாகிறது.

தஜ்ஜால் ஒரு காஃபிர்

தங்களை நபி என்று வாதிடுவோர் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, அவர்களை 'தஜ்ஜால்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். எனவே இந்த தஜ்ஜாலை அவர்களில் ஒருவனாக கருதிவிடக் கூடாது.

பொதுவாக முஸ்லிம்களை வழிகெடுக்கும் பணியில் ஈடுபடுவோரில் ஒரு சாரார் தங்களையும் முஸ்லிம் என்று கூறிக் கொண்டே வழிகெடுப்பர். மற்றொரு சாராரோ தங்களை முஸ்லிம் எனக் கூறாமல் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேறச் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். நபி என்று கூறி வழிகெடுத்த தஜ்ஜால்கள் (பொய்யர்கள்) முதல் வகையினர். இந்த தஜ்ஜாலோ இதில் இரண்டாம் வகையினரைச் சேர்ந்தவன்.

'தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே 'காஃபிர்' என்று எழுதப்பட்டிருக்கும். எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து மூஃமின்களும் அதைப் படிப்பார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல்-முஸ்லிம்.

'இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் - அஹ்மத்.

தஜ்ஜால் இயற்கையிலேயே காஃபிர். யூதன் என்பதே சரி! தங்களை நபி என்று வாதிடுவோரை 'தஜ்ஜால்' எனக்குறிப்பிடுவது, அவனைப் போல் இவர்கள் குழப்பவாதிகளாகவும், பொய்யர்களாகவும் இருந்ததுதான். எனவே அவர்களில் ஒருவனாக இவனைக் கருதக் கூடாது.

தஜ்ஜால் தன்னைக் கடவுள் எனக் கூறுவான்

'தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும், நீக்குவான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். மக்களிடம் 'நானே கடவுள்' என்பான். நீதான் என் கடவுள் என்று ஒருவர் கூறினால், அவன் சோதனையில் தோற்றவனாவான். 'அல்லாஹ் தான் என் இறைவன்' என்று ஒருவர் கூறி, அதிலேயே அவர் இறந்தால், அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டவர் ஆவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) நூல்கள்-அஹ்மத், தப்ரானி.

தன்னை கடவுள் எனக்கூறியும், கடவுளாக ஏற்க வேண்டும் என்று கூறியும் தஜ்ஜாலின் குழப்ப நிலைத் தொடரும்.

தஜ்ஜாலின் மாயா ஜாலங்கள்

'வானத்திற்கு மழை பொழியுமாறு கட்டளையிடுவான், மழை பொழியும். பூமியை நோக்கி விளையச் செய்! என்பான், அது பயிர்களை முளைக்க வைக்கும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

கட்டுடல் உடைய ஓர் இளைஞனை அழைப்பான், அவனை இரண்டு துண்டுகளாக வாளால் வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான், உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்'

'ஒரு மனிதனைக் கொன்று அவன் உயிர்ப்பிப்பான், மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்சாரீ நபித் தோழர் நூல்-அஹ்மத்.

அவனைப் பின்பற்றியவர்கள் தவிர, மற்ற மக்கள் மிகவும் வறுமையின் பிடியில் இருக்கும்போது, அவனிடம் மலைபோல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான், இன்னென்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் எனக் கூறும் நதி, உண்மையில் நரகமாகும், அவன் நரகம் என்று கூறும் நதியோ சொர்க்கமாகும். மழை பொழிந்திட வானத்திற்கு கட்டளையிட்டதும், மக்கள் பார்க்கும் போதே மேகம் மழை பொழியும். 'இதைக் கடவுளைத் தவிர வேறுயாரும் செய்ய முடியுமா?' என்று கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அவர்கள் நூல் அஹ்மத்.

இப்படி பல அற்புதங்களைச் செய்யும் இவனின் வலையில் முஸ்லிம்களும் வீழ்வர். சாதாரணமாக முஸ்லிமல்லாத ஒருவன் வந்து ஒரு அற்புதம் செய்து காட்டினால் ஈமானை இழந்து விடும் முஸ்லிம்களும் உண்டு. இவ்வாறு இருக்க பல அற்புதங்கள் செய்யும் தஜ்ஜாலை சில முஸ்லிம்களும் நம்புவர் என்பதில் ஆச்சரியம் இல்லையே!.

தஜ்ஜாலை புறக்கணிப்போர் நிலை

'...பின்னர் மக்களிடம் வருவான் (தன்னை கடவுள் என ஏற்கும்படி) அழைப்பான். அவனை மக்கள் ஏற்க மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகிச் செல்வான். காலையில் (அவனை ஏற்க மறுத்த) மக்கள், தங்களின் அனைத்துச் செல்வங்களையும் இழந்து நிற்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

தஜ்ஜாலை ஏற்க மறுத்துப் புறக்கணிப்போர், அவனை ஏற்க மறுத்து விட்டால், தங்களின் சொத்தை இழக்க வேண்டியது வரும். இந்த நிலையை ஏற்படுத்துவதும் அவன்தான்.

தஜ்ஜாலிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை

'தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ, அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதை நெருப்பு என்று காண்கிறார்களோ, அது சுவை மிகுந்த குளிர்ந்த தண்ணீராகும். உங்களில் ஒருவர் இந்த நிலையை அடைந்தால், நெருப்பு எனக் காண்பதில் விழட்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

தஜ்ஜால் வாழும் காலம்

தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் இருப்பான்? என்று நாங்கள் கேட்போது, 'நாற்பது நாட்கள் இருப்பான். ஒரு நாள், ஒரு வருடம் போன்றும், மற்ற நாட்கள் சாதாரண நாட்கள் போன்றும் இருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்கள்; - முஸ்லிம், திர்மீதி.

தஜ்ஜால் போக இயலாத ஊர்கள்

'மதினா நகருக்கு தஜ்ஜால் பற்றிய பயம் தேவை இல்லை. அன்றைய நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவு வாயில் (பாதைகள்) இருக்கும். ஓவ்வொரு பாதையின் நுழைவாயிலிலும் இரண்டு (வானவர்கள்) இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ பக்ரா (ரலி) நூல் - புகாரீ.

'அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களுக்கும் அவன் செல்வான். ஆனால் மஸ்ஜிதுல் ஹராம், மதீனா பள்ளிவாசல், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிவால்களையும் அவனால் நெருங்க இயலாது' என்று நபி (ஸல்) கூறினார்கள் (அஹ்மத்).

தஜ்ஜாலிடமிருந்து தப்பிக்க...

தஜ்ஜால் ஏற்படுத்தும் குழப்ப நிலைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றி, ஈமானையும், பாதுகாத்திட இரண்டு வழிகளை நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைக் காணும் மக்களுக்காக கற்றுத் தருகிறார்கள்.

(1) அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கை விட்டும் பாதுகாப்புத் தேட நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

'அல்லாஹூம்ம இன்னீ அஊதுபிக்க மின்ஃபித்னதித்தஜ்ஜால் (இறைவனா! தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). தொழுகையில் இதைத் தொடர்ந்து ஓதிப் பிராத்திக்கும் எவரும் தஜ்ஜால் பின்னே போக மாட்டார்கள். தொழாதவர்களும், தங்களின் பிரார்த்தனையில் இதைக் கேட்காதவர்களும் தஜ்ஜாலின் மாயா ஜாலங்களில் மயங்கி ஈமானை இழப்பார்கள். அவன் பின்னே அவனை ஏற்றுக் செல்வார்கள்.

(2) உங்களில் ஒருவர் தஜ்ஜாலை அடைந்தால், 'கஹ்பு' அத்தியாயத்தின் ஆரம்ப பகுதியை ஓதிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்கள்; - முஸ்லிம், திர்மீதி.

இந்த இரண்டு வழிகள் மூலமே தஜ்ஜாலின் மாயாஜாலக் குழப்பங்களில் இருந்து தப்பிக்க இயலும்.

தஜ்ஜால் கொல்லப்படும் இடம்

தஜ்ஜால் கீழ் திசையிலிருந்து மதீனாவை குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை 'ஷாம்' பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கேதான் அவன் அழிவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

கஸ்பஹான் பகுதியல் வாழும் யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி, அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு நுழைவுப் பாதைகள் இருக்கும். ஓவ்வொரு நுழைவு பாதையிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். பாலஸ்தீன் நகரின் 'லுத்' எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா நபி (அலை) அவர்கள் இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன்பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி (அலை) அவர்கள் இந்த பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்- அஹ்மத்.

ஒற்றைக் கண்ணனான, காஃபிர் என நெற்றில் எழுதப்பட்டுள்ள தஜ்ஜால் மக்களிடையே வந்து, சில மாயாஜாலச் செயல்களில் ஈடுபட்டு, நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் சுற்றி வந்து மக்களை வழிகெடுக்கும் படியான செயலில் ஈடுபடுவான் என்பது, மறுமை நாள்வரும் முன் நடக்கக்கூடிய செயலாகும்.

தஜ்ஜாலின் வருகை மூலம் மறுமை நாள் மிக மிக ... அருகில் வந்து விட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மறுமை நாளின் அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் கூறியவற்றில் பல நடந்து முடிந்து விட்டது போல், இதுவும் நடக்கும் என்ற உண்மையை நம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களை ஏமாற்றும் எவரும் தங்கள் பிரச்சாரத்தை பெண்களிடமிருந்தே துவங்குகின்றனர். தங்கள் மீது பெண்களுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சில போலி விளம்பரங்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் கூறிப் பெண்களை நம்ப வைக்கின்றனர். இதே வழிமுறையைத் தான் தஜ்ஜாலும் கையாளுவான். அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். ஒரு குடும்பத்தில் மார்க்கத்தைச் சரியாக விளங்கிக் கொண்ட ஆண்கள் பலர் இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்கள், தர்ஹாக்களுக்குச் செல்வதையோ, அனாச்சாரங்கள் புரிவதையோ பிரச்சாரம் செய்தாலும் கூட தடுத்து நிறுத்த முடிவதில்லை. இதே நிலைதான் தஜ்ஜால் வரும்போதும் நிகழும்.

'பமிரிகனாத் என்னும் இந்த உவர் நிலங்களுக்கு தஜ்ஜால் புறப்பட்டு வருவான். அப்போது அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். எந்த அளவுக்கெனில், (அன்று) ஒவ்வொரு ஆணும் தனது மனைவி, தாய், மகள், சகோதரி, மாமி ஆகியோரிடம் சென்று அவர்கள் தஜ்ஜாலைப் பின்பற்றிச் சென்றுவிடக் கூடாது என அஞ்சி, அவர்களைக் கயிற்றினால் கட்டி வைப்பான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் - அஹ்மத்.

அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையில்லாத ஆண்கள், பெண்கள் மற்றும் நயவஞ்சகர்கள் அனைவரும் தஜ்ஜாலின் அற்புதங்களில் மதி மயங்கி, தங்கள் ஈமானை இழந்து அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். எனினும், ஆண்களை விட பெண்களே அதிக அளவில் தஜ்ஜாலைப் பின் பற்றுவார்கள் என்று இந்த நபி மொழி கூறுவதால், பெண்கள் கூடுதலான எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும். தஜ்ஜாலின் சோதனையிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புத் தேடிய வண்ணம் இருக்க வேண்டும்.

தஜ்ஜாலை பெண்களே அதிகம் பின்பற்றுவர். கிறித்தவ வேதமான பைபிள் மற்றும் இந்து வேதங்களிலும் தஜ்ஜால் பற்றி குறிப்பு காணப்படுகிறது.

19-(5) ஈஸா நபியின் வருகை

நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அடையாளமாவார். அதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்... (அல்குர்ஆன் - 43:61).

'எனது உயிரை தன் iயில் வைத்திருப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன் (ஈஸா), உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார், சிலுவையை முறிப்பார், பன்றியைக் கொல்வார், ஜிஸ்யா வரியை நீக்குவார், (தர்மம்) வாங்குவதற்கு எவருமே இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

மறுமை நாள் வரும் முன், 'வர உள்ளது' என்பதை தெரிவிக்கும் அடையாளமாக ஈஸா நபி (அலை) அவர்களின் வருகையும் இருக்கும். ஈஸா நபி என்றால் யார்? நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் வந்த ஈஸா நபியா? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அவர் வருவாரா? இது சாத்தியமாகுமா? என்ற கேள்விகள் எழவே செய்யும்.

'ஈஸா (அலை) அவர்கள் மறுமைநாளின் அடையாளமாவார்' என்ற இறைவனின் அறிவிப்பை பலமுறை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த வாசகம், ஈஸா நபியின் வருகைக்கு முன் வந்த 'தவ்ராத்' வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அல்லது அவர்களுக்கே வழங்கப்பட்ட 'இன்ஜீல்' வேதத்தில் கூறப்பட வில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்கள் வந்து சென்றபின் இனியும் வருவார் என்றே குர்ஆன் கூறுகிறது. எனவே, ஏதோ ஒரு ஈஸா அல்ல முன்பு வந்த நபியான ஈஸாதான் மீண்டும் வருவார் என்பதே உண்மை. இதனால் தான் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக ஈஸா நபியின் வருகையும் அமைந்துள்ளது.

இன்னும் மர்யமின் மகனும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை. அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்கு குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இதுபற்றிய சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர (சரியான) அறிவு அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னலவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமைமிக்கவன். மிக ஞானமுடையவன் ஆவான் - (அல்குர்ஆன் : 4:157,158).

'அவரை அவர்கள் கொல்லவில்லை' என அல்லாஹ் அறிவிப்பதின் மூலம் அவர்கள் கொல்லப்படவில்லை என்பதோடு 'உயிருடன் உள்ளார்' என்பதும் விளங்கும். 'உயிருடன் எங்கே உள்ளர்கள்?' என்ற கேள்வியும் வரக்கூடாது என்பதற்காக தன்னிடம் உயர்த்திக் கொண்டான் என்றும் அல்லாஹ் கூறி விட்டான், அதாவது, ஈஸா நபி (அல) அவர்கள் 'உயிருடன் வானில் உள்ளார்' என்பது மேற்கண்ட வசனம் மூலம் உறுதியாகிறது.

0 comments:

Post a Comment